×

மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சி

தர்மபுரி, ஜன.22: தர்மபுரியில், மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது. பல்வேறு அரசு பள்ளிகளில் இருந்து 95 படைப்புகளை மாணவ-மாணவிகள் பார்வைக்கு வைத்திருந்தனர்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் இணைந்து மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான(இன்ஸ்பயர் அவார்டு) அறிவியல் கண்காட்சியை தர்மபுரி இலக்கியம்பட்டி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடத்தியது. மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 95 அறிவியல் படைப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர்.

மின்சாரத்தில் இயங்கும் பேட்டரி வாகனங்கள், தூய்மையான குடிநீர் தயாரித்தல், மேஜிக் பாக்ஸ், எண்ணெய் படலம் பிரிக்கும் கருவிகள், காளான் வளர்ப்பு, கழிவுநீரை சுத்தப்படுத்தி பயிர்களுக்கு பயன்படுத்துதல், கம்பி இல்லாத மின்சாரம், மலைப்பகுதிகளில் வாகனங்கள் செல்ல சிக்னல் கருவி, பூமி வெப்பம் அடைதல், ஆட்டோ மெட்டிக் ஸ்பேரயர், தவறான சிகிச்சை அளித்தால் முன்னெச்சரிக்கை செய்யும் அலாரம், பாம்பை விரட்டும் கருவி, காய்கறி தோட்டங்கள், ரயில்வே பிளாட்பாரம் மற்றும் மேம்பாலம், போர்வெல் குழாயில் தவறி விழுந்த குழந்தைகளை மீட்கும் கருவி உள்ளிட்ட படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

இப்படைப்புகளை கண்டறிந்து தேர்வு செய்வதற்கு சென்னையில் இருந்து 2 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். அவர்கள் ஒவ்வொரு படைப்புகளையும் நேரில் பார்வையிட்டு மாணவ, மாணவிகளிடம் விளக்கம் கேட்டு தெரிந்து கொண்டனர். அவர்கள் தேர்வு செய்யும் படைப்புகளுக்கு மதிப்பெண் அளித்து, மாநில அளவில் நடக்கும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். நேற்று நடந்த அறிவியல் கண்காட்சியை டிஆர்ஓ ரஹமத்துல்லா கான் தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் பார்வையிட்டனர்.

இந்த புத்தாக்க அறிவியல் கண்காட்சிக்கான முன்னேற்பாடு பணிகளை அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியை கவிதா மற்றும் கண்காட்சி குழுவினர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன், பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ஹேமலதா, மாவட்ட கல்வி அலுவலர்கள் பாலசுப்பிரமணி, பொன்முடி, சண்முகவேல் மற்றும் அனைத்து வகைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், அலுவலக அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : District Level Innovative Science Exhibition ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா