×

லளிகம் அரசு பள்ளியில் பள்ளி பரிமாற்ற திட்டம்

தர்மபுரி, ஜன.22: தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், பள்ளி பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, லளிகம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பூதனஅள்ளி நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த 20 மாணவர்கள் வந்தனர். அங்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்தின் கீழ் பள்ளியில் உள்ள வசதிகள், வளங்கள், கற்றல், கற்பித்தல் நிகழ்வுகள் ஆகியவற்றை பார்த்து புதிய அனுபவம் பெறும் நிகழ்ச்சி நடந்தது. முதலில் மாணவர்கள் மூலம் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மரக்கன்றுகள் நடப்பட்டன. தலைமை ஆசிரியர் சீனிவாசன் மாணவர்களிடையே கலந்துரையாடினார். தொடர்ந்து மின்னணு நூலகம் (இ-லைபரரி), தகவல் தொழில்நுட்பத்துடன் கூடிய வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், வேளாண் பிரிவு மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ள பண்ணை ஆகியவற்றை பார்வையிட்டு பயன்பெற்றனர். பாரம்பரிய கலையை நினைவுகூறும் வகையில் தெருக்கூத்து நடத்தப்பட்டது. பொருட்களைப்பற்றி ஆங்கிலத்தில் விவரித்தல், வாழ்வியல் கணிதம், சூழலோடு தொடர்புடைய அறிவியல் சோதனைகள், பேரிடர் மேலாண்மை முதலுதவி அளித்தல், சாலை விதிகள், சுகாதாரம், உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து குறித்தும் இப்பள்ளி ஆசிரியர்களால் காணொளி காட்சி மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. கணித மன்றத்தின் சார்பில் ஆசிரியர்கள் கணிதத்தில் கதைகள், புதிர்கள் ஆகியவற்றை மாணவர்களுக்கு விளக்கி கூறினர். மேலும் வருகை புரிந்த அனைத்து மாணவர்களுக்கும் நினைவுப்பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிறைவாக தறி நெசவு செய்யும் ஆலைக்கு களப்பயணம் மேற்கொண்டு அது குறித்த விவரங்களை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

Tags : Lalikam Government School ,
× RELATED லளிகம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் 30 ஆண்டுக்கு பின்பு சந்திப்பு