×

தர்மபுரி-சேலம் நெடுஞ்சாலையில் 6 கி.மீ., தொலைவிற்கு பழுதடைந்து கிடக்கும் மின் விளக்குகள்

தர்மபுரி, ஜன.22: தர்மபுரி-சேலம் நெடுஞ்சாலையில் 6 கிலோ மீட்டர் தூரம் மின்விளக்குள் பழுதால், இரவு நேரத்தில் தொடர்ந்து விபத்து நடக்கிறது. கும்மிருட்டால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தர்மபுரி- சேலம் நெடுஞ்சாலையில் 4 ரோடு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பாரதிபுரம், செந்தில்நகர், கலெக்டர் அலுவலகம், அரசு கலைக்கல்லூரி, ஒட்டப்பட்டி, தொழில்மையம், தேங்காய்மரத்துப்பட்டி பஸ்ஸ்டாப், அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, சேஷம்பட்டி உள்ளிட்ட பகுதிகள் உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சேலத்திற்கு முக்கிய சாலையாகவும், பெங்களூரு செல்ல முக்கிய சாலையாகவும் இது உள்ளது.

இந்த சாலையில் இரவு நேரத்திலும் சென்டர் மீடியனில்(சாலையின் நடுவே) ஒளிரும் மின் மிளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் மின்விளக்கு எரிந்தால் பகல்போன்று இருக்கும். வாகன ஓட்டிகள் விபத்து இல்லாமல் வாகனங்களை ஓட்டி வந்தனர். தர்மபுரி நான்கு ரோட்டில் இருந்து சேஷம்பட்டி வரை சுமார் 9 கி.மீ., தூரம் உள்ளது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு மின்விளக்குள் பழுதடைந்து எரியாமல் போனது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அளித்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த மாதம் தர்மபுரி நான்கு ரோட்டில் இருந்து பாரதிபுரம் வரையிலும் (சுமார் 2 கி.மீ., தூரம்), நல்லம்பள்ளியில் இருந்து சேஷம்பட்டி வரையிலும்(1 கி.மீ., தூரம்) மின்விளக்கு எரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  தற்போது செந்தில்நகர், கலெக்டர் அலுவலகம், அரசு கலைக்கல்லூரி, ஒட்டப்பட்டி, தொழில் மையம், அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி வரையிலும் சென்டர் மீடியன்களில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்கு எரிவதில்லை.

இதனால், இரவு நேரத்தில் கும்மிருட்டில் வாகனங்கள் செல்ல வேண்டியது உள்ளது. மேலும், அடிக்கடி விபத்து நடக்கிறது. குறிப்பாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ள இடங்களில் விபத்து அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்றிரவு தர்மபுரியில் இருந்து நல்லம்பள்ளி நோக்கி டூவீலரில் சென்ற வாலிபர் ஒருவர் செந்தில்நகர் அருகே இருட்டில் வேகத்தடை தெரியாமல் மோதி கிழே விழுந்தார். அதேபோல், முன்னாள் சென்ற வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இரு வாகனங்களும் சேதமடைந்தன. இந்த எரியாத மின்விளக்குகளால் கும்மிருட்டில் அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு தர்மபுரி -சேலம் நெடுஞ்சாலையின் நடுவே உள்ள மின்விளக்குகளை உடனே சரிசெய்து எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், தர்மபுரி உழவர் சந்தையில் இருந்து பழைய தர்மபுரி வரை எரியாத  சென்டர் மீடியன் மின் விளக்குகளை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Dharmapuri-Salem Highway ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா