×

லோடு ஆட்டோ மோதியதில் கம்பி அறுந்தது ஆபத்தான நிலையில் அந்தரத்தில் தொங்கும் மாத்தி ரயில்வே கேட்

கும்பகோணம், ஜன. 22: கும்பகோணம் மாத்தி ரயில்வே கேட்டில் லோடு ஆட்டோ மோதியது. இதில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் ரயில்வே கேட் அந்தரத்தில் தொங்குகிறது. இதை இரும்பு சங்கிலியால் ஊழியர்கள் கட்டி வைத்துள்ளனர்.
கும்பகோணம் அடுத்த மாத்தி ரயில்வே கேட் வழியாக சாக்கோட்டை, கொற்கை, நந்திவனம், மருதாநல்லூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று வரலாம். இதனால் இந்த சாலை வழியாக 24 மணி நேரமும் பொதுமக்களின் நடமாட்டங்கள் இருக்கும். ரயில் வரும் நேரங்களில் மாத்தி ரயில்வே கேட் மூடினால் இருபுறங்களிலும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும். ரயில் சென்ற பிறகு கேட்டை திறந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ரயில்வே கேட்டை கடக்க 30 நிமிடத்திற்கு மேலாகி விடும்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ரயில் வரும் நேரத்தில் ரயில்வே கேட் கீப்பர் கேட்டை மூடுவதற்கு முயன்றார். அப்போது வேகமாக வந்த லோடு ஆட்டோ, ரயி்ல்வே கேட் மீது மோதியது. அப்போது கேட்டை இழுக்கும் கம்பி அறுந்து கேட் மேலே சென்றதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. பின்னர் கேட் கீப்பர், ரயில்வே இருப்பு பாதை போலீசாரிடம் புகாரளித்தார். ஆனால் கேட்டை இழுக்கும் கம்பி அறுந்ததால் கேட் முழுவதும் மேலே செல்லாமல் பாதி நிலையில் தொங்கி கொண்டிருந்தது. இதனால் எப்போது வேண்டுமானாலும் கேட் விழும் நிலை இருந்ததால் இருபுறங்களிலும் நின்று ஊழியர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகளை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

மேலும் ரயில் வந்தபோது கேட் மூடாததால் இரும்பு சங்கிலியால் சாலையை மறித்து வாகனங்கள் தண்டவாளத்தை கடக்காமல் பாதுகாத்தனர். பின்னர் ரயில் சென்ற பிறகு கேட் பாதி நிலையிலேயே ஆபத்தான வகையில் தொங்கி கொண்டிருந்தது. பின்னர் தொழில்நுட்ப ஊழியர்கள் வந்து தற்காப்புக்காக கேட் கீழே விழாமல் இருப்பதற்கு சங்கிலியை கொண்டு கட்டி வைத்தனர். எனவே ரயில்வே நிர்வாகம், மாத்தி ரயில்வே கேட்டில் அடிக்கடி இதுபோன்ற பிரச்னை ஏற்படுவதால் நிரந்தரமான பணியை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தண்டவாளத்தை கடந்து செல்பவர்களின் நிலை கேள்வி குறியாகும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கபிஸ்தலம் பகுதியில் மணல் கடத்தி வந்த மாட்டு வண்டி பறிமுதல்