×

கந்தூரி விழாவையொட்டி நாகூர் தர்கா மின்விளக்குகளால் அலங்கரிக்கும் பணி துவக்கம்

நாகை, ஜன.22: நாகூர் ஆண்டவர் தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு விழா வரும் 26 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு கொடி ஊர்வலம் நாகை புதுப்பள்ளி தெரு வழியாக யாஹீசைன் தெரு, நூல்கடை தெரு, வெங்காயகடை தெரு, பெரிய கடை தெரு, நீலா தெற்கு வீதி, கீழவீதி, வடக்கு வீதி, தேரடி தெரு, புது தெரு, சர்அகமது தெரு, கொட்டுப்பாளைய தெரு உள்ளிட்ட நாகையில் 40 தெருக்களின் வழியாக சென்று பின்னர் அண்ணாசிலை, பப்ளிக் ஆபீஸ் சாலை வழியாக நாகூர் எல்லையை சென்றடையும். இதை தொடர்ந்து நாகூரில் செய்யது பள்ளி தெரு, குஞ்சாலி மரைக்காயர் தெரு, ரயிலடி தெரு உள்ளிட்ட 14 தெருக்களின் வழியாக சென்று தர்காவின் அலங்கார வாசலை சென்றடையும். கொடியேற்றம் முடிந்தவுடன் 4ம் தேதி சந்தனம் பூசுதல் நிகழ்ச்சியும், 6ம் தேதி கடற்கரை செல்லுதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

இதை தொடர்ந்து 8ம் தேதி கொடியிறக்கப்படும். விழா நாட்களில் நாகூர் தர்காவிற்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை தருவார்கள். இதை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகை நகராட்சி சார்பில் நாகூர் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டது. இதன்பின்னர் நாகூர் தர்காவின் அலங்கார வாசல் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.அதேபோல் தர்கா எதிர்புறம் உள்ள மினார் உட்பட அனைத்தும் வர்ணங்கள் பூசும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கு இடையே நேற்று நாகூர் தர்கா அலுவலகத்தில் கந்தூரி விழா முன்னேற்பாடுகள் கூட்டம் நடந்தது. இதில் எம்எல்ஏ தமிமூன் அன்சாரி, நகராட்சி ஆணையர் ஏகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Commencement ,Nagore Dharga ,
× RELATED ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ...