×

புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் மாவட்ட செயல் அலுவலர் வலியுறுத்தல்

அனைத்து துறை அலுவலர்கள்
நாகை, ஜன.22:புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க அனைத்து துறை அலுவலர்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட செயல் அலுவலர் செல்வம் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் சார்பில் மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கான திட்ட விளக்கம் மற்றும் மாவட்ட பகுப்பாய்வு அறிக்கை தொடர்பான விளக்க கூட்டம் நாகையில் நடந்தது. மாவட்ட செயல் அலுவலர் செல்வம் பேசியதாவது: தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டமானது கலெக்டர் தலைமையின் கீழ் செயல்படுகிறது. தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் உலக வங்கி நிதியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்படும் தனித்துவம் வாய்ந்த திட்டம். இந்த திட்டமானது தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 120 தாலுகாவில் 3994 கிராம ஊராட்சிகளில் இரண்டு கட்டமாக செயல்படுத்தப்படும். நாகை மாவட்டத்தில் நாகை, தலைஞாயிறு, செம்பனார்கோயில், சீர்காழி ஆகிய 4 தாலுகாவில் உள்ள 147 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் முதல் கட்டமாக செம்பனார்கோயில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊரக தொழில் முனைவோரை உருவாக்குதல், நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்குதல் ஆகியவை நோக்கமாகும். இந்த திட்டத்தில் சுய உதவிக்குழு குடும்பங்களில் உள்ள உறுப்பினர்களே பயனாளிகள் ஆவார்கள். பெண்கள், இளைஞர்கள், ஆர்வமுள்ள தொழில் முனைவோர், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர், ஆதிதிராவிடர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க அனைத்து துறை அலுவலர்களும் ஒத்துழைக்க வேண்டும். தகுதியான தனிநபர் பயனாளிகளையும், தொழில் கூட்டமைப்புகளையும் தேர்வு செய்து திட்ட பயன்கள் வழங்க வேண்டும் என்றார்.

Tags : District Executive Officer ,entrepreneurs ,
× RELATED சுவிட்சர்லாந்தில் ‘தி ரைஸ் – எழுமின்’...