×

நெல் கொள்முதல் மையம் திறக்க வலியுறுத்தி வழக்கு ராமநாதபுரம் கலெக்டர் பதிலளிக்க உத்தரவு

மதுரை, ஜன. 21:நெல் கொள்முதல் மையங்கள் திறக்கக்கோரிய வழக்கில் ராமநாதபுரம் கலெக்டர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த ராமச்சந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: முதுகுளத்தூர் தாலுகாவில் 10 ஆண்டுக்கும் மேலாக போதிய மழை பெய்யவில்லை. இதனால், பலரும் வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்து விட்டனர். சமீபத்தில் பெய்த மழையால் பல இடங்களில் கண்மாய் மற்றும் குளங்கள் நிரம்பியுள்ளன. இதனால், பலரும் நெல் பயிரிட்டு விவசாயப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். தற்போது சாகுபடி பணிகள் நடந்து வருகிறது. அரசின் சார்பில் போதுமான அளவுக்கு நெல் கொள்முதல் மையங்கள் இல்லாததால், பலரும் பாதித்துள்ளனர்.

குறிப்பாக இடைத்தரகர்கள் மூலம் நெல்லை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல், இடைத்தரகர்கள் மட்டும் அதிக லாபம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, முதுகுளத்தூர், தூரி மற்றும் செல்வநாயகபுரம் விலக்கு ஆகிய இடங்களில் அரசின் சார்பில் நெல் கொள்முதல் மையங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் மனுவிற்கு ராமநாதபுரம் கலெக்டர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரம் தள்ளிவைத்தனர்.

Tags : paddy procurement center ,Ramanathapuram Collector Collector ,
× RELATED கோபி கூகலூரில் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையம் திறப்பு