×

கம்பத்தில் தனியார் ஆம்புலன்ஸில் கட்டணக் கொள்ளை

கம்பம், ஜன. 21: கம்பத்தில் தனியார் ஆம்புலன்ஸில் அதிகக் கட்டணம் வசூலிப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். கம்பத்தில் உள்ள அரசு மருத்துவமனை மாவட்ட மருத்துவமனைக்கு இணையாக பல்வேறு சிகிச்சைகளை  முற்றிலும் இலவசமாக வழங்கி வருகின்றது. இம்மருத்துவ மனைக்கு கம்பம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் மட்டுமின்றி கேரளாவில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும்  இம்மருத்துவமனையில் சி.டி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் இல்லை. சாலை விபத்து, தீக்காயம், மாரடைப்பு ஏற்பட்டு இம்மருத்துவமனைக்கு கொண்டு வரும் நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக மதுரை, தேனி கா.விலக்கு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

 இவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் இலவசமாக அனுப்பி வைக்கப்படுகிறது. 108 ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஆகும்பட்சத்தில் அவசர சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது.  இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். ஏழை, எளிய மக்களும் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் செய்வதறியாது அதிக பணத்தை கொடுத்து செல்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தனியார் ஆம்புலன்சுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து இப்பகுதியைச் சேர்ந்த ரவி கூறுகையில், ``மாவட்டத்திலேயே ஆம்புலஸுக்கு அதிக கட்டணம் இங்குதான் வசூலிக்கப்படுகிறது. 50 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகளை கொண்டு செல்ல நான்காயிரம் ரூபாய் கட்டணமும், மதுரைக்கு செல்ல 6 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக வாங்குகின்றனர். இது மிகவும் அதிகம். இதனால் கம்பத்தில் தற்போது பத்துக்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ்கள் உலவுகின்றன. எரிகிற வீட்டில் புடுங்குபனுக்கு ஆதாயம் என்பது போல் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் கொள்ளை கட்டணம் வாங்கும் தனியார் ஆம்புலன்சுக்கு மாவட்ட நிர்வாகம் கட்டணம் நிர்ணயம் செய்யவேண்டும்’’ என்றார்.

Tags : Fare robbery ,
× RELATED கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது