×

புரட்சியின் தலைவன் லெனின் ‘இன்று நினைவுநாள்’

விளாடிமிர்  இலீச்  உல்யானவ்... ஜார் மன்னன் ஆட்சியை மக்கள் புரட்சி மூலம் தூக்கியெறிந்த மாமேதை லெனினின் இயற்பெயர் தான் அது. ரஷ்யாவில் 1870ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி லெனின் பிறந்தார். அவர் தன் அண்ணனான அலெக்சாண்டர் மீது மிகுந்த பாசமும், மதிப்பும் கொண்டிருந்தார். நிறைய புத்தகங்கள் படித்ததன் விளைவாக அலெக்சாண்டருக்கு ஏராளமான விஷயங்கள் தெரிந்திருந்தன. எதிர்காலத்தில் தன் அண்ணனைப் போலவே தானும் அறிவாளியாக வேண்டுமென்று லெனின் தீர்மானித்தார். திடீரென ஒருநாள் தந்தை இறந்து போனார். அதிலிருந்து மீள்வதற்குள் ரஷ்யாவில் கொடுங்கோலாட்சி நடத்திக் கொண்டிருந்த ஜார் மன்னனைக் கொல்ல முயற்சி செய்ததற்காக அலெக்சாண்டருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த செய்தியால் குடும்பம் நிலைகுலைந்து போனது. அலெக்சாண்டருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய நாளில் லெனினுக்குப் பள்ளியில் இறுதித் தேர்வு நடைபெற்றது. மாவட்டத்தில் முதல் மாணவனாக லெனின் தேறினார்.

இதையடுத்து பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அந்தக் காலத்தில் ஜார் மன்னனுக்கு எதிரான போராட்டங்க் வலுத்தன. உரிமை கேட்ட மாணவர்களின் போராட்டத்தை வன்முறையால் ஒடுக்கினான். லெனின் படித்த கசான் பல்கலைக்கழகம் சிறைச்சாலை போல மாற்றப்பட்டது. ஜார் மன்னனுக்கு எதிராக போராட வழக்கறிஞராக லெனின் முடிவு செய்தார். ஆனால், அவரை சட்டக்கல்லூரியில் சேர்க்க மறுத்தனர். இதனால் வீட்டில் இருந்தே படித்து  நான்கு வருட சட்டக்கல்வியை ஒன்றரை ஆண்டில் பட்டம் பெற்றார்.  அதிலும் மாநிலத்தில் முதலாவதாக தேர்வானார். அவருடைய குடும்பம் மாஸ்கோ நகரில் குடியேறியது.

லெனின் பெத்ரோகிராடில் ஏழைத் தொழிலாளர்களுக்கான வழக்குகளை நடத்தினார்.  காரல்மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூல் லெனினை வெகுவாக ஈர்த்தது. அடுத்ததாக காரல்மார்க்சும், அவருடைய நண்பர் எங்கெல்சும் எழுதிய அனைத்து நூல்களையும் படித்தார். அதிலிருந்து ஒடுக்குமுறைகளுக்கு முடிவுகட்ட தொழிலாளர்களின் புரட்சி ஒன்றுதான் வழி என்று லெனின் தீர்மானித்தார். ஜார் ஆட்சிக்கு எதிராகப் போராடியதற்காக லெனினுக்கு நான்கு ஆண்டு கால சைபீரியச் சிறைவாசம் அளிக்கப்பட்டது. லெனின் தான் காதலித்த கிரூப்ஸ்காயாடிவ திருமணமும் செய்து கொண்டார். லெனினுடன் சேர்த்து அவரையும் சைபீரியாவிற்கு அரசு நாடு கடத்தியது

1905ம் ஆண்டு ஜாரின் ஒடுக்குமுறைக்கு எதிராக முதல் ரஷ்யபுரட்சி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனாலும் லெனின் துவண்டு விடவில்லை. மக்கள் புரட்சி நடைபெறுவதற்கான பணியை செய்து கொண்டேயிருந்தார். 1917ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் ரஷ்யாவில் புரட்சி வெடித்தது. ஒரே நாளில் வெற்றியும் பெற்றது. மன்னராட்சி முறை ஒடுக்கப்பட்டது. ஆனால், மக்களை ஏமாற்றிவிட்டு அரசு அதிகாரத்தை முதலாளிகள் கைப்பற்றிக் கொண்டனர்.

இதனால் நவம்பர் 7ம் தேதி புரட்சியைத் தொடங்க முடிவு செய்தார் லெனின். இத்தகவல் பெத்ரோகிராடு நகரத் தொழிலாளர்களுக்கு ரகசியமாக கொண்டு செல்லப்பட்டது.  பெத்ரோகிராடு வீதிகளில் தொழிலாளர்கள் ஆயுதங்களுடன் அணிவகுக்கத் தொடங்கினர். அரசு அலுவலகங்கள். ரயில் நிலையங்கள், காவல் நிலையங்கள், வானொலி நிலையம் முதலியவை கைப்பற்றப்பட்டன. அரசின் தலைமையகமான கிரெம்ளின் மாளிகை இறுதியாக வீழ்ந்தது. உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது. ரஷ்யா சோசலிச நாடு என அறிவிக்கப்பட்டது. லெனின் அதனுடைய அரசு தலைவரானார். 1924ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி மாமேதை லெனின் மரணமடைந்தார். அவர் நினைவு நாள் இன்று.

Tags : revolution ,Lenin ,Memorial Day ,
× RELATED சித்தூர் லெனின் நகர் காலனியில் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து