×

ராஜபாளையம் அருகே முத்துசாமிபுரத்தில்

ராஜபாளையம், ஜன. 21: ராஜபாளையம் அருகே, முத்துசாமிபுரத்தில் கண்மாயில் குப்பைகளை கொட்டுவதால், நீர்நிலை பாழ்பட்டு குப்பைத் தொட்டியாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும், குடியிருப்பு பகுதி வாறுகாலை தூர்வாராததால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. ராஜபாளையம் அருகே, முத்துசாமிபுரத்தில் நெசவாளர்கள் வசிக்கும் பகுதி உள்ளது. இப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகள், வாறுகால் கழிவுகளை நீண்ட நாட்களாக ஊராட்சி நிர்வாகம் அள்ளாததால் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆண்களுக்கு சுகாதார வளாகம் இல்லாததால் கோவிலுக்கு முன்புறம் உள்ள பாதையை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். பல்வேறு பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளை, ஊராட்சி பணியாளர்கள் அம்மன் கோயிலுக்கு பின்புறம் உள்ள செங்குளம் கண்மாய் கரையில் வாரக்கணக்கில் கொட்டுகின்றனர்.

பின்னர் மொத்தமாக எரிக்கின்றனர். இதில், ஏற்படும் புகையால் அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளது. வீடுகளில் வெளியேறும் கழிவுநீருக்கு போதுமான வாறுகால் வசதி இல்லாததால், கோயிலுக்கு பின்புறம் உள்ள செங்குளம் கண்மாயில் கலக்கிறது. இதனால் கண்மாய் நீரை நம்பி உள்ள 10க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளிலும் தண்ணீர் மாசடையும் அபாயம் உள்ளது. எனவே, முத்துசாமிபுரத்தில் நெசவாளர் பகுதியில் குப்பைகளை அகற்ற, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த கருப்பசாமி கூறும்போது, ‘கண்மாயில் குப்பைகள் அதிகமாக கொட்டுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதுடன், நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. மேலும் கண்மாய்க்கு எதிரே, தெற்கு தெருவில் பல நாட்களாக வாறுகால் தூர்வாரப்படுவதில்லை. இதனால், கழிவுநீர் தேங்கி பொது மக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் உருவாகிறது. கோயில் அருகே துர்நாற்றம் வீசுவதால் வழிபாடு செய்ய வரும் பக்தர்கள் மிகுந்த அதிருப்திக்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக கோயிலில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் சாப்பிடக் கூட முடியாத அவல நிலை இன்றும் தொடர்கிறது. இது குறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு முத்துசாமிபுரம் பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இது குறித்து முத்துசாமிபுரம் பஞ்சாயத்து தலைவர் செல்விகணேஷிடம் கேட்டபோது, ஆள் பற்றாக்குறை மற்றும் பொங்கல் விடுமுறையால் சுகாதார பணிகள் தாமதமானது, உடனடியாக கண்மாயில் உள்ள குப்பைகளையும், தெருக்களில் தேங்கி உள்ள சாக்கடை கழிவுகளையும் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஆண்கள் சுகாதார வளாகம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்றார்.

Tags : Muthusamipuram ,Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தீவிர...