×

புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டி முடித்த சமுதாய கூடங்களை விரைவில் திறக்க வேண்டும்

புதுக்கோட்டை, ஜன.21: புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டு இன்றும் திறக்கப்படாமல் உள்ள சமுதாய கூடங்களை விரைந்து திரக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 497 பஞ்சாயத்துகள் உள்ளது. இந்த பஞ்சாயத்துகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப பல்வேறு இடங்களில் தொடர்ந்து பொதுமக்களின் வசதிக்காக சமுதாய கூடங்கள் கட்டப்பட்டது. இந்த சமுதாய கூடங்களில் அந்த பகுதியை சேர்ந்த ஏழை எளியவர்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை இலவசமாக நடத்தி வருகின்றனர். இதனால் தனியார் திருமண மண்டபங்களுக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்வதை மக்கள் தவிர்த்தனர். மேலும் கிராமங்களில் பொதுவான கோவில் திருவிழாக்கள், ஊர் ஒன்று கூடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இந்த சமுதாய கூடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சமுதாய கூடம் இல்லாத கிராமத்தினர் தாங்கள் அருகில் உள்ள கிராமங்களில் உள்ளதுபோல் எங்கள் ஊருக்கும் சமுதாய கூடம் அமைத்து தர வேண்டும் என்று அவ்வப்போது கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைடுத்து 2015-16ம் ஆண்டுகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களில் உள்ள பஞ்சாயத்துகளில் சமுதாய கூடம் இல்லாத ஊர்களில் புதிதாக சமுதாய கூடம் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டது.

பிறகு ஒப்பந்த முறையில் கட்டிட பணிகளை மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டு அனைத்து இடங்களில் சமுதாய கூடங்களின் கட்டுமான பணிகள் முடிந்து விட்டது. ஆனால் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. எனவே இதனை விரைவில் திறக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கிராமங்களில் உள்ள ஏழைகள் சுப நிகழ்ச்சி நடத்த வேண்டுமானால் அந்த கிராமத்தின் அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு மட்டும் பெரும் தொகை செலவு செய்ய வேண்டி இருந்தது. இதனை தவிர்க்கும் சுப நிகழ்ச்சிகளை இலவசமாக நடத்த வசதியாக அந்ததெந்த கிராமத்திலேய சமுதாய கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சமுதாய கூடம் கட்டப்பட்டது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் சுப நிகழ்ச்சிக்கு செய்யப்பட்ட செலவுகள் சற்று குறைந்தது.

மேலும் நகர் பகுதிக்கு செல்ல வேண்டிய அலைச்சல் மிச்சமானது. இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் சில இடங்களில் சமுதாய கூடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த சமுதாய கூடங்களை பார்க்கும் போது புதிய திருமண மண்டபம் போல் காட்சியளிக்கிறது. விரைந்து அனைத்து சமுதாய கூடங்களையும் திறப்புவிழா நடத்தி அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும என்றனர்.

Tags : Pudukkottai district ,community camps ,
× RELATED கறம்பக்குடி அருகே இயந்திரம் வாயிலாக கோடை நடவு பணிகள் தீவிரம்