×

நவீனமயமாக்கல் பணி ராஜவாய்க்கால், குமாரபாளையம் பாசன விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

பரமத்திவேலூர், ஜன.21: பரமத்தி வேலூர் பகுதி விவசாயத்தின் பிரதான வாய்க்கால்களான ராஜவாய்க்கால் உள்ளிட்ட நான்கு வாய்க்கால் புனரமைத்தல் மற்றும் நவீன மயமாக்கல் பணி தொடர்பான பாசன விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பரமத்திவேலூர் பகுதி விவசாயத்தின் பிரதான நீர் ஆதாரமாக ராஜவாய்க்கால் பொய்யேரி வாய்க்கால், குமாரபாளையம் வாய்க்கால் மற்றும் மோகனூர் வாய்க்கால்கள் உள்ளன. இந்த வாய்க்கால்களில் ராஜவாய்க்கால் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றுப்படுகை அணைப்பகுதியில் இருந்து தொடங்கி, நன்செய் இடையாறு வரையிலும், பொய்யேரி வாய்க்கால் ஊஞ்சப்பாளையம், ஒழுகூர்பட்டி வரையிலும் செல்கிறது. குமாரபாளையம் வாய்க்கால் குச்சிபாளையத்தில் தொடங்கி எல்லக்காட்டூர் வரையிலும், மோகனூர் வாய்க்கால் நன்செய் இடையாறு பகுதியில் உள்ள கூடுதுறையில் தொடங்கி மோகனூர்  வடுகப்பட்டி வரையிலும் செல்கிறது.


 இந்த வாய்க்கால்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இப்பகுதி விவசாயத்திற்கு நீராதாரமாக விளங்கி வரும் நான்கு வாய்க்கால்களையும் புனரமைத்து, நவீனமயமாக்க வலியுறுத்தி தமிழக அரசுக்கு அப்பகுதி விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.  இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம், தமிழக அரசு நான்கு வாய்க்கால்களையும் புனரமைப்பு செய்து, நவீனமயமாக்கல் செய்ய ₹184 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிப்பை வெளியிட்டது. இதுதொடர்பாக, பரமத்திவேலூர் பகுதி வாய்க்கால் பாசன விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம், பரமத்திவேலூர் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் நடந்தது. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கவுதமன்,  உதவி செயற்பொறியாளர் வினோத்குமார் மற்றும் 100க்கும் மேற்பட்ட வாய்க்கால் பாசன விவசாயிகள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் ராஜவாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களில் தண்ணீர் நிறுத்துவது குறித்தும், அதற்காக விவசாயிகள் மாற்று ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, தற்போது மேட்டூர் அணையில் 110 அடி தண்ணீர் உள்ள நிலையில், விவசாயத்திற்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் வாழை, வெற்றிலை உள்ளிட்ட பயிர்கள் அதிகளவு பயிர் செய்துள்ளனர்.

இந்நிலையில், புனரமைத்தல் மற்றும் நவீன மயமாக்கல் பணிக்காக வாய்க்கால்களில் தண்ணீரை நிறுத்தம் செய்தால், விவசாயிகள் பெருமளவு பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும் என்பதால், தண்ணீரை நிறுத்தம் செய்வதை 2 மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், கடைமடை பகுதியில் பணிகள் துவங்குவதால், அதற்கு முன்பு அப்பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.  மேலும், தொடர்ந்து நீண்ட காலம் தண்ணீரை நிறுத்தினால் விவசாயம் பெரும் பாதிப்பிற்குள்ளாகும் எனவும் தெரிவித்தனர். இந்நிலையில், முதற்கட்ட பணிக்களுக்காக  வரும் மார்ச் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை, நான்கு மாத காலத்திற்கு வாய்க்கால்களில் தண்ணீரை நிறுத்துவது எனவும், ஜூலை 1ம் தேதி மீண்டும் வாய்க்கால்களில் தண்ணீர்  திறக்கவும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. அதுவரை நான்கு மாத காலத்தில் செய்து முடிக்கப்பட்ட பணிகளை தொடர்ந்து, மீண்டும் சிறிது காலம் வாய்க்கால்களில் தண்ணீர் கொடுத்து அதன் பின்னர் விவசாயிகளின் ஆலோசனையை அறிந்து மீண்டும் தண்ணீரை நிறுத்தி, 2ம் கட்டப் பணிகளைத் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது.

Tags : Kumarapalayam Irrigation Farmers Advisory Meeting ,
× RELATED சேலத்தில் 103.7 டிகிரி வெயில்