×

ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி மக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகம்

பெரம்பலூர், ஜன. 21: பெரம்பலூரில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஆண்டுதோறும் நாடு முழுவதும் ஜனவரி மாதத்தில் சாலை விபத்துகளை தடுக்கவும், உயிர்ப்பலி எண்ணிக்கையை குறைக்கவும், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சாலை பாதுகாப்பு வாரவிழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி நேற்று மாலை காவல் துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.பெரம்பலூர் பாலக்கரையில் நடந்த விழிப்புணர்வு பேரணி தொடக்க விழாவுக்கு கலெக்டர் சாந்தா தலைமை வகித்தார். டிஎஸ்பிக்கள் பெரம்பலூர் கென்னடி, மங்கலமேடு தேவராஜ், ஆயுதப்படை ரவி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்தன், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வக்குமார், அரசு போக்குவரத்து கழக பெரம்பலூர் கோட்ட மேலாளர் புகழேந்திராஜ், பெரம்பலூர் கிளை மேலாளர் ஞானமூர்த்தி முன்னிலை வகித்தனர்.

பெரம்பலூர் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன், குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன் ஆகியோர் கொடியசைத்து ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தனர். பின்னர் பாலக்கரை ரவுண்டானாவில் வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். பாலக்கரையில் துவங்கிய ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி பழைய பஸ்ஸ்டாண்ட் வரை சென்று திரும்பி மீண்டும் புது பஸ்ஸ்டாண்ட் பாலக்கரை வழியாக கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு முடிவடைந்தது. பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் நித்யா, பாடாலூர் இன்ஸ்பெக்டர் சுகந்தி, தேசிய நெடுஞ்சாலை டிராபிக் இன்ஸ்பெக்டர் கோபிநாத், டவுன் டிராபிக் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேரணியில் காவல்துறை, ஊர்க்காவல் படை, கல்லூரி விரிவுரையாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED துபாய் வெள்ளத்தில் மகன் உயிரிழந்த...