முன்விரோத தகராறில் பழிக்குப்பழி ஆட்டோவில் கடத்தி ரவுடி வெட்டி கொலை

* கல்குட்டையில் சடலம் வீச்சு
* 3 பேர் கைது

சென்னை, ஜன. 21: சென்னை திருவல்லிக்கேணி பிபி குளம் 2வது தெருவை சேர்ந்தவர் ராம்குமார் (24). பிரபல ரவுடி. இவர் மீது, மயிலாப்பூர், ஐஸ்அவுஸ் காவல் நிலையங்களில் திருட்டு, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏசி மெக்கானிக் வேலையும் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ராம்குமார், மயிலாப்பூர் நடேசன் சாலையில் உள்ள டீக்கடை முன்பு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 2 ஆட்டோக்களில் வந்த 11 பேர், கத்திமுனையில் ராம்குமாரை ஆட்ேடாவில் கடத்தி கொண்டு, நடுக்குப்பம் 5வது தெருவில் உள்ள பொது கழிப்பறைக்கு சென்றனர் . அங்கு ராம்குமாரை சரமாரியாக கத்தியால் வெட்டினர். இதில் அவர் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடிவந்தனர். அப்போது மர்மநபர்களிடம் இருந்த ஆயுதங்களை பார்த்து, அருகில் செல்லவில்லை. உடனே பொதுமக்கள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் ஐஸ்அவுஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். இதை கண்ட மர்மநபர்கள், மீண்டும் ஆட்டோவில் ராம்குமாரை ரத்தம் சொட்ட சொட்ட தூக்கிப் போட்டு கொண்டு தப்பினர். இதுகுறித்து ஐஸ்அவுஸ் போலீசில், ராம்குமாரின் தந்தை குருமூர்த்தி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், திருவல்லிக்கேணி நடுக்குப்பம் 8வது தெருவை சேர்ந்த அப்பு (24), பிரேம்குமார் (25), ஆட்டோ டிரைவர் சிவமணி (24), அப்துல் ரஹிம் (24), அஸ்மத் (23), சுபான் (22), கார்த்திக் (25), ரஞ்சித் (22), வினோத் (24), ஜெகன் (29), அருண் (30) ஆகியோர் என தெரிந்தது. இதையடுத்து ராம்குமாரை கடத்திய ஆட்டோ பதிவெண்ணை வைத்து திருவல்லிக்கேணி பிஎம் தர்கா பகுதியை ேசர்ந்த ஆட்டோ டிரைவர் அருண், ஜெகன், அப்பு ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதற்கிடையில், கோவளம் கடலோர காவல்படை காவல் நிலையம் பின்புறம் உள்ள கல்குட்டையில் வெட்டு காயங்களுடன் கிடந்த வாலிபர் சடலத்தை கேளம்பாக்கம் போலீசார் மீட்டு விசாரித்தனர். அதில், கடத்தப்பட்ட ராம்குமார் என உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், போலீசாரிடம் சிக்கிய 3 பேரிடம் தீவிரமாக விசாரித்தனர். அதில், பொங்கல் பண்டிகையன்று இரவு குடிபோதையில் நடுக்குப்பத்தை சேர்ந்த பிரேம்குமாருக்கும், ராம்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்  ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். அப்போது ராம்குமார், தனது கையில் இருந்த பீர் பாட்டிலை, உடைத்து பிரேம்குமாரின் கழுத்தில் பலமாக குத்தி விட்டு தப்பினார். இதில் படுகாயமடைந்த பிரேம்குமாரை, பொதுமக்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக பிரேம்குமார், ஐஸ்அவுஸ் போலீசில், ராம்குமார் மீது புகார் அளித்தார். அதன்படி போலீசார் ராம்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
அந்த வேளையில், மயிலாப்பூர் நடேசன் சாலையில் உள்ள டீக்கடையில் ராம்குமார் இருப்பதாக பிரேம்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற பிரேம்குமார், தனது நண்பர்களுடன் சேர்ந்து ராம்குமாரை ஆட்டோவில் கடத்தினார்.

பின்னர், தன்னை பீர் பாட்டிலால் குத்திய இடத்துக்கு ராம்குமாரை அழைத்து சென்று கழிப்பறையில் வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு, 5வது தெருவிலேயே உடலை வீசிவிட்டு சென்றனர். ஆனாலும் ஆத்திரம் அடங்காத பிரேம்குமார் மீண்டும் ராம்குமாரை ஆட்டோவில் கடத்திச் சென்றார். அங்கு அவர் இறந்ததை உறுதிசெய்த பிறகு கோவளம் அருகே கல்குட்டையில் உடலை வீசிவிட்டு நண்பர்களுடன் தலைமறைவாகிவிட்டார் என அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags : Rowdy ,death ,
× RELATED கொலை முயற்சி, வழிப்பறி வழக்கு ரவுடி மீது பாய்ந்தது குண்டாஸ்