×

பெரும்புதூர் - குன்றத்தூர் இடையே நிறுத்தப்பட்ட மாநகர பஸ்சை இயக்க கோரி சாலை மறியல்: ஒரு மணி நேரம் பரபரப்பு

பெரும்புதூர், ஜன. 21:  குன்றத்தூர் ஒன்றியம் சோமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீண்டும் மாநகர பஸ்களை இயக்க வலியுறுத்தி நேற்று காலை அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது. குன்றத்தூர் ஒன்றியத்தில் சோமங்கலம், நடுவீரப்பட்டு, பூந்தண்டலம் ஆகிய ஊராட்சிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் ஆகியோர் சென்னை தாம்பரம், குன்றத்தூர், போரூர் மற்றும் புறநகர் பகுதிகளில் தனியார் பள்ளி, கல்லூரி மற்றும் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக சென்னை தாம்பரத்தில் இருந்து நடுவீரப்பட்டு, மேலாத்தூர், சக்தி நகர், பூந்தண்டலம் வழியாக புதுப்பேடு வரை, சென்னை போரூரில் இருந்து 2 மாநகர பஸ்கள் கடந்த 4 ஆண்டுகளாக இயக்கப்பட்டன. ஆனால், கடந்த 3 மாதங்களுக்கு முன் இந்த பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டன.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இங்கு சாலை வசதி இல்லை. மேலும் பயணிகள் அதிகளவு செல்வதில்லை என சாக்குபோக்கு சொல்லி, மீண்டும் பஸ் போக்குவரத்தை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், மாநகர போக்குவரத்து அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து, நேற்று காலை பெரும்புதூர் - குன்றத்தூர் சாலை புதுப்பேடு பகுதியில் பெண்கள் உள்பட 100க்கும் ேமற்பட்டோர் சாலையில் திரண்டனர். அங்கு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து குன்றத்தூர் மற்றும் சோமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, மீண்டும் பஸ் போக்குவரத்து வசதி செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதையொட்டி அங்கு பரபரப்பு நிலவியது.

Tags :  Road ,Metropolitan ,Kundathoor ,Perumbudur ,
× RELATED தெற்கு – வடக்கு உஸ்மான் சாலையில்...