வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வலுவான வாதங்களுடன் தடைகளை உடைத்தெறிய பொதுமக்கள் கோரிக்கை

வேலூர், ஜன.21: வலுவான வாதங்களை தொல்லியல்துறை முன்பு வைத்து ஏற்கனவே திட்டமிடப்பட்டு கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட வேலூர் நேதாஜி மார்க்கெட்டை நவீன முறையில் கட்டமைக்க வேண்டும் என்று வேலூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் வாலாஜாவுக்கு அடுத்து நகராட்சி அந்தஸ்தை பெற்ற வேலூர் நகரில் 120 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான வேலூர் நேதாஜி மார்க்கெட் தற்போது 726 கடைகளுடன் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல், காய்கறி கழிவுகள் குவிந்து சேறும் சகதியுமாக காட்சி அளித்து கொண்டுள்ளது. அதோடு 100 ஆண்டுகளை கடந்த கட்டிடங்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில், ஏற்கனவே சரிந்து விழுந்த கடைகளை சாட்சியாக கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடம்பெற்றுள்ள வேலூர் நகரில் ₹1,000 கோடியில் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் கோட்டையை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேம்படுத்துவது, நகரில் ஸ்மார்ட் சாலைகள், பூங்காக்கள், நவீன பஸ் நிலையம் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் தற்போதுள்ள வேலூர் நேதாஜி மார்க்கெட்டை ₹36 கோடி செலவில் 1,200 கடைகளுடன், மூன்றடுக்கு வளாகமாக்க திட்டமிடப்பட்டு அதற்கான வரைபடம் தயாரிக்கும் பணிகளும் நடந்து வரைபடமும் சாரதி மாளிகை முன்பு வைக்கப்பட்டது.இதற்கு தற்போதுள்ள நேதாஜி மார்க்கெட் வியாபாரிகளே பல்வேறு காரணங்களை கூறி தடை ஏற்படுத்தி வந்த நிலையில், மத்திய தொல்லியல்துறையும் மூன்றடுக்கு நேதாஜி மார்க்கெட் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கான வாதபிரதிவாதங்களுக்கு மாநகராட்சி எந்தவித எதிர்வாதமும் வைக்காத நிலையில் நவீன மூன்றடுக்கு நேதாஜி மார்க்கெட் திட்டத்தை கைவிடுவதாக திடீரென அறிவித்தது. இது வேலூர் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே மார்க்கெட்டுக்கு வரும் வேலூர் மக்கள் மட்டுமின்றி, வேலூர் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்களும் கடும் நெரிசலுடன், சேற்றிலும், சகதியிலுமே நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். அதோடு கழிவுநீர் வெளியேற வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவுநீரையும் கடந்து செல்ல வேண்டிய அவலத்துக்கு ஆளாகின்றனர். மேலும் மார்க்கெட் வளாகமெங்கும் காய்கறி கழிவுகள், அதனால் ஏற்படும் துர்நாற்றம், இயற்கை உபாதைகளுக்கு ஒதுங்க வழியில்லாத நிலை என நேதாஜி மார்க்கெட் வரும் மக்கள் தினமும் வேதனைகளை சந்தித்து வருகின்றனர்.இந்த நிலையில் நவீன மூன்றடுக்கு நேதாஜி மார்க்கெட் கட்டப்படும் என்ற அறிவிப்பு அவர்கள் நெஞ்சில் பால்வார்த்த நிலையில், அத்திட்டம் கைவிடப்படுவதாக வந்த தகவல் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய தொல்லியல்துறையின் ஆட்சேபணைக்கு சரியான எதிர்வாதங்களை வைக்காமல், உடனடியாக திட்டத்தை திரும்ப பெற்றது நியாயமில்லை என்று தங்கள் வேதனையை தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே வேலூர் தெற்கு காவல் நிலைய கட்டுமான பணிக்கு கூட மத்திய தொல்லியல்துறை எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எப்படியோ அந்த எதிர்ப்பை காவல்துறை சரிக்கட்டி காவல் நிலையத்தை கட்டி முடித்தது போல், வேலூர் நகர மக்களுக்கு அத்தியாவசியமான நவீன நேதாஜி மார்க்கெட் வளாகத்தையும் கட்டி முடிக்க மாநகராட்சி உருப்படியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக வேலூர் மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியம், பொறியாளர் கண்ணன் ஆகியோரிடம் கேட்டபோது, ‘நவீன நேதாஜி மார்க்கெட் வளாகம் கட்டும் திட்டம் கைவிடப்பட்டது. நீங்கள் குறிப்பிடும் தெற்கு காவல் நிலையம் கட்டிட வரைபட அனுமதியின்றி கட்டியது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நேதாஜி மார்க்கெட்டை அப்படி கட்ட முடியாது. வேறு இடத்தில் கட்ட முடியுமா? என்பதை இனிமேல்தான் யோசிக்க வேண்டும்’ என்றனர்.

Tags :
× RELATED ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை