×

நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியப்போக்கால் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து விபத்தை ஏற்படுத்தும் வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை: விரைந்து சிரமைக்க மக்கள் கோரிக்கை

கூடுவாஞ்சேரி, ஜன. 21: நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியப்போக்கால் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை குண்டும், குழியுமாக மாறிவருகிறது. என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பழைய மாமல்லபுரம் சாலையான கேளம்பாக்கம் - திருப்போரூர் சாலையில் தொடங்கி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இணையும் வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை 18 கிமீ கொண்டது. சாலையை கடந்த 2012ம் ஆண்டு ₹40 கோடியில் 4 வழிச் சாலையாக அமைக்கப்பட்டது. இந்த சாலையோரம் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கடந்த 2015ம் ஆண்டு பெய்த கனமழையால் சாலையோரத்தில் உள்ள ரத்தினமங்கலம், வெங்கப்பாக்கம், நல்லம்பாக்கம், கொளப்பாக்கம் உள்பட பல்வேறு ஏரிகள் உடைந்தன. இதனால் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே சாலை மற்றும் சென்டர் மீடியன்கள் மழை வெள்ளத்தில் அடித்து சென்றன.

ஆனால், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சென்டர் மீடியன் இதுவரை சீரமைக்கவில்லை. மேலும் சாலையும் குண்டும், குழியுமாக மாறிவருகிறது. இதையொட்டி, ஆங்காங்கே மரண பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை சீரமைக்காமல் உள்ள நெடுஞ்சாலை துறையின் அலட்சியப்போக்கால், இந்த சாலையில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.. இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘’ஏரியை ஆக்கிரமித்து வீடுகளை கட்டியவர்கள் மழை காலங்களில் ஏரிகளில் மழைநீர் தேங்கியதும் ஏரிகளை வெட்டுகின்றனர். இதனால் ஏரிகள் உடைந்து வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் உள்ள சென்டர் மீடியன் மழை வெள்ளத்தால் அடித்து சென்றுவிடுகிறது. சாலையும் குண்டும், குழியுமாக மாறி, ஆங்காங்கே மரண பள்ளங்களாக காட்சியளிக்கிறது. இரவு நேரங்களில் வேகமாக வரும் பைக், கார், ஆட்டோ, லாரிகள் மற்றும் பஸ்கள் மரண பள்ளங்கள் இருப்பது தெரியாமல் அதிக வேகத்தில் செல்வதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

இதனால் வாகன ஓட்டிகள், அரசு மற்றும் தனியார் பஸ்சில் செல்லும் பயணிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதில் பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் வரும்போது மட்டும் குறிப்பிட்ட இடங்களில் சாலை சீரமைக்கப்படுகிறது.
கடந்த 2012ம் ஆண்டு ₹40 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட சாலை இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் அலட்சியப்போக்கில் உள்ளனர்.எனவே சாலை மற்றும் சென்டர் மீடியனை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Vandalur - Kelambakkam Road ,
× RELATED வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில்...