×

சாலை விரிவாக்கத்துக்கு வீடுகளை அகற்றுவதா? கலெக்டர் அலுவலகத்தை நரிக்குறவர்கள் முற்றுகை

திருவள்ளூர், ஜன. 21: திருவள்ளூர் அடுத்த தாமரைப்பாக்கம் மறுமலர்ச்சி நகரில், சாலை விரிவாக்கம் என கூறி வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் அடுத்த தாமரைப்பாக்கம் மறுமலர்ச்சி நகரில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் நரிக்குறவர்கள் 46 குடும்பத்தினருக்கு மாவட்ட நிர்வாகம் இடம் ஒதுக்கி கொடுத்தது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மூலம் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கூறி, வருவாய்த்துறை அதிகாரிகள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என நரிக்குறவர்களிடம் கூறியுள்ளனர். பாசிமணி விற்று பிழைப்பு நடத்திவரும் இவர்கள், தங்களது பிள்ளைகளை இங்குள்ள பள்ளியில் சேர்த்துள்ளனர். இந்நிலையில், மாற்றுவழியில் சாலை அமைக்க வேண்டும். தொகுப்பு வீடுகளை இடிக்கக்கூடாது என கூறி 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள், நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை திடீரெ முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் தடுத்து, சிலரை மட்டும் கலெக்டரிடம் மனு கொடுக்க அழைத்து சென்றனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், மனுமீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags : houses ,Collector ,
× RELATED மேட்டுப்பாளையம் அருகே காரமடை திருமா...