×

மக்காச்சோள பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்குவதில் பாரபட்சம் விவசாயிகள் ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கோவில்பட்டி, ஜன.21: முடுக்கலான்குளத்தில் மக்காச்சோளம் பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை பாரபட்சமின்றி வழங்கக்கோரி விவசாயிகள் கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
 கடந்த 2018ம் ஆண்டிற்கான மக்காச்சோளத்திற்கான பயிர் காப்பீடு இழப்பீடு தொகை கோவில்பட்டி தாலுகாவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி குறுவட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு மக்காச்சோள பயிர் காப்பீடு இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு ரூ.13 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கோவில்பட்டி அருகே முடுக்கலான்குளம் கிராம விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5300 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பிற கிராமங்களுக்கு ஏக்கருக்கு ரூ.13 ஆயிரம் வழங்கியதை போல் தங்களது கிராமங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதே தொகையை வழங்க வேண்டும் என்று முடுக்கலான்குளம் கிராம விவசாயிகள் கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அழகுமுத்துப்பாண்டியன் தலைமையில் நடந்த போராட்டத்தில் மாவட்ட உதவி செயலாளர் சேதுராமலிங்கம், நகர செயலாளர் சரோஜா, கயத்தாறு ஒன்றிய செயலாளர் பொன்னுச்சாமி, தாலுகா செயலாளர் பாபு, மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் பரமராஜ், பாலசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுவை ஆர்டிஓ விஜயாவிடம் அளித்தனர். மனுவை பெற்று கொண்ட அவர், நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.  

Tags : RTO ,
× RELATED நன்னடத்ைத உறுதிமொழி பத்திரம் அளித்த 262...