×

தொழிலாளர்கள் திரும்பாததால் பனியன் உற்பத்தி பாதிக்கும் அபாயம்

திருப்பூர், ஜன. 21:  பொங்கல் பண்டிகை கொண்டாட, சொந்த ஊர் சென்ற தொழிலாளர்களில் 40 சதவீதத்தினர் திருப்பூர் திரும்பாததால் பனியன் உற்பத்தி பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.  திருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்களும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜாப்-ஒர்க் நிறுவனங்களும் செயல்படுகிறது. இந்நிறுவனங்களில் கட்டிங், பேட்லாக், ஓவர்லாக், போல்டிங், அயர்ன், மெசின், சிங்கர், பேக்கிங், செக்கிங், லேபிள், கைமடித்தல், டேமேஜ், அடுக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தங்கள் குடும்பத்தோடு தங்கி திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் தொழிலாளர்கள் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளை கொண்டாட ஆண்டுதோறும் அவரவர் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி பெரும்பாலான பனியன் நிறுவனங்கள் கடந்த 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை விடுமுறை அளித்தது.

 இதனால் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு தங்களது குடும்பத்துடன் சென்றனர். விடுமுறை முடிந்த நிலையில், 40 சதவீத தொழிலாளர்கள் இன்னும் திருப்பூர் திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக தொழில் நகரமான திருப்பூர் வெறிச்சோடி காணப்படுகிறது. சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்கள், இன்னும் சில நாட்கள் கழித்துதான் திரும்பி வருவார்கள் என கூறப்படுகிறது. இதனால் பனியன் தொழில் பெரிதும் பாதிக்கப்படும் அபாய நிலை உள்ளதாக பனியன் நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...