×

திருப்பூர் வாலிபர் கொலை வழக்கு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு

திருப்பூர், ஜன. 21: திருப்பூரில், வாலிபர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகரை சேர்ந்தவர் அருண்குமார் (23). இவர், அதேபகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார். கடந்த 17ம் தேதி இரவு வீட்டில் இருந்த அருண்குமார் தனது நண்பர் அழைப்பதாக பெற்றோரிடம் கூறிவிட்டு பைக்கில் சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவருடைய பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். ஆனால், கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் வெள்ளியங்காடு பகுதியில் முள்காட்டுக்குள் அருண்குமார் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அதைப்பார்த்த பொதுமக்கள் திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

 இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அருண்குமாரின் கைகள் கயிற்றால் கட்டப்பட்டு, சத்தம் போடாமல் இருப்பதற்காக அவருடைய வாய்க்குள் துணி திணிக்கப்பட்டு இருந்தது. கழுத்து, வாய், நெற்றி, பின்னந்தலையில் பல இடங்களில் அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட காயங்கள் இருந்தன. மேலும் மார்பு, வயிறு, முதுகு உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது. போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  இது குறித்த புகாரின் பேரில், தெற்கு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Tags : Thiruppur Youth Corps Special Forces ,
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...