×

ஊட்டி மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையத்தில் நீர்பிரி முகடு பகுதி மேலாண்மை வன பாதுகாவலர்களுக்கு பயிற்சி

ஊட்டி, ஜன. 21:ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த உதவி வன பாதுகாவலர்களுக்கான வனப்பகுதிகளில் நீர்பிரி முகடு பகுதி மேலாண்மை குறித்த பயிற்சி ஊட்டியில் துவங்கியுள்ளது. ஊட்டியில் உள்ள இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு ஆராய்ச்சி நிலையத்தில் வனப்பகுதிகளில் நீர்ப்பிரி முகடுப்பகுதி மேலாண்மை குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் துவங்கியுள்ளது. இதில் ஆந்திரபிரதேசம், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த 31 உதவி வன பாதுகாவலர்கள் பங்கேற்றுள்ளனர்.  கோவையில் உள்ள மாநில வன பணியாளர்களுக்கான மத்திய உயர் பயிற்சியகத்தின் நிதியுதவியுடன் வழங்கப்படும் இப்பயிற்சியின் துவக்க விழா நடந்தது. விஞ்ஞானி கஸ்தூரி திலகம் வரவேற்றார். இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு மைய தலைவர் (பொறுப்பு) மணிவண்ணன் முன்னிலை வகித்து பேசினார். முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கவுசல் தலைமை வகித்து பயிற்சி முகாமினை துவக்கி வைத்தார். கோவையில் உள்ள மாநில வன பணியாளர் உயர் பயிற்சியக விரிவுரையாளர் வித்யாசாகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், ‘‘தண்ணீரின் மகத்துவத்தை தெரிவிக்கும் நோக்கில் கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீரின்றி அமையாது உலகு என திருவள்ளுவர் குறள் இயற்றியுள்ளார். மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் நீர் அவசியமானது. இந்தியாவில் மொத்தம் 732 மாவட்டங்கள் உள்ளன. இதில் சுமார் 256 மாவட்டங்களில் கடுமையான தண்ணீர் தட்டுபாடு நிலவுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இதேபோல் கடந்த 2018ம் ஆண்டு நிதி ஆயோக் அறிக்கையின் படி இ்ந்தியாவின் 21 முக்கிய நகரங்களில் நிலத்தடி நீர்மட்டமானது மிகவும் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர உலக அளவில் பெரும்பாலான இடங்களில் நீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தற்போது நாம் உள்ளோம். வனப்பகுதிகளில் தான் நீர் உற்பத்தியாகிறது. சுற்றுச்சூழல் மாசுபாடு, வன அழிப்பு போன்றவற்றால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தை சமாளிக்க மரம் நடுவது அவசியம். அதுபோக கிடைக்க கூடிய மழையை தண்ணீர் சேமிப்பது அவசியம். கிணறுகள், குளங்கள் போன்றவற்றை புனரமைத்து மழைநீரை சேமிக்க வேண்டும். குறிப்பாக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நீர் மேலாண்மையை மேற்கொள்ள ேவண்டும்,’’ என்றார்.  முடிவில் விஞ்ஞானி ஹோம்பே கவுடா நன்றி கூறினார். வரும் பிப்ரவரி 2ம் தேதி வரை நடைபெற உள்ள இப்பயிற்சி முகாமில் மண் பாதுகாப்பு கட்டமைப்பு, வடிகால் ஓடைகள் பராமரிப்பு, மழைநீர் சேகரிப்பு, கசிவுநீர் கட்டமைப்பு போன்றவற்றிற்கு இடம் தேர்வு செய்தல், வடிவமைத்தல் போன்ற பயிற்சிகளும், கள பயிற்சி, செயல்முறை விளக்கம், திட்ட அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளன.

Tags : Ooty Soil and Aquatic Research Center ,
× RELATED சோதனை கடவுள் அளிக்கும் பயிற்சி