×

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் சீர்கேடுகளை களைய வேண்டும்

தஞ்சை, ஜன. 21: அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் சீர்கேடு, குறைகளை களைந்து முறையாக செயல்படுத்த வேண்டுமென ஏஐடியூசி தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஏஐடியூசி தொழிற்சங்க மாநில பொது செயலாளர் சந்திரகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயிகள் நலனை முன்னிறுத்தி பொதுவிநியோக முறைக்கு உதவிகரமாக துவங்கப்பட்ட அரசு நெல் கொள்முதல் தற்போது பல்வேறு புகார்களுக்கு உள்ளாகி பல்வேறு சீர்கேடுகளின் உச்ச கட்டத்துக்கு சென்றுவிட்டது. நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்பாடுகளே இதற்கு முக்கிய காரணமாக அமைந்ததுவிட்டது.சீர்கேடுகளை களைந்து முறைப்படுத்தும் நோக்கில் எங்களது சங்கம் சார்பில் 21 அம்ச ஆலோசனைகளை முன் வைத்து மேலாண்மை இயக்குநரை சந்தித்து தெரிவிக்க நேரம் ஒதுக்க கோரியும் மண்டல மேலாளர்களுக்கு கடிதம் மூலம் முறையிட்டும் அலட்சியப்படுத்துகின்ற போக்கே நீடிக்கிறது. கொள்முதல் நிலையங்களுக்கு நாள்தோறும் செல்கின்ற கொள்முதல் அலுவலர் முதற்கொண்டு ஆய்வு செய்ய வருகின்ற உயர் அதிகாரிகள் வரை கொள்முதலுக்கு ஏற்ப மூட்டை ஒன்றுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கொள்முதல் பணியாளர்கள் விவசாயிகளிடம் பெற்று தரவேண்டும் என்று கட்டாய நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கொள்முதல் செய்த நெல் 24 மணி நேரத்துக்குள் கொள்முதல் நிலையங்களில் இருந்து இயக்கம் செய்யப்பட வேண்டும் என்ற விதிகள் இருந்தும் மாதக்கணக்கில் இயக்கம் செய்யாத நிலையும், இதன் காரணமாக ஏற்படுகின்ற எடை குறைவை கொள்முதல் பணியாளர்கள் மீது சுமத்தி சில ஆயிரம் சம்பளம் பெறுகின்ற கொள்முதல் பணியாளர்களிடம் பல ஆயிரங்கள் வசூலிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் விவசாயிகள் பணம் தான்.
நெல் ஏற்றி செல்கின்ற லாரி டிரைவர்கள், நிர்வாகம் வழங்குகிற வாடகை தொகையைவிட லாரி ஒன்றுக்கு ரூ.1,200 கூடுதலாக கொடுத்தால் தான் ஏற்றி செல்கின்ற நடைமுறையும் இதை தடுக்காமல் நிர்வாகம் பார்வையாளராக இருப்பதும் வேதனைக்குரியது. இதில் கையாளப்படுகின்ற பல லட்சம் ரூபாயும் விவசாயிகளிடம் பெறுவது தான். இதுபோன்று பல்வேறு விபரங்களை பரிசீலிக்க வேண்யுள்ளது.

எனவே நெல் கொள்முதலில் நடைபெறுகின்ற முறைகேடுகளை முதலில் மேலிருந்து களையப்பட வேண்டிய கட்டாய நிலையை சுட்டி காட்டுவதுடன் இதற்கு கொள்முதலில் பெரும்பான்மையான பணியாளர்களை கொண்டுள்ள எங்களது தொழிற்சங்கம் முழு ஒத்துழைப்பு தர தயாராகவுள்ளோம் எங்களது சங்கம் சார்பில் கொள்முதலை முறைப்படுத்த ஆலோசனைகளை 5000 துண்டறிக்கைகள் வெளியிட்டு அனைத்து தரப்பினருக்கும் வழங்கி ஆதரவை கோரி வருகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : government paddy purchasing centers ,
× RELATED மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்