புகையான் நோய் தாக்குதலால் அறுவடைக்கு தயாராக இருந்த 1000 ஏக்கர் சம்பா நெற்பயிர் நாசம்

நாகை, ஜன.21: நாகை மாவட்டத்தில் புகையான் நோய் தாக்குதல் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நாசம் அடைந்தது. நாகை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டு காலத்திற்கு பின்னர் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து நல்ல மகசூல் அடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு சாகுபடி அடைந்த சம்பா பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அறுவடைக்கு தயாராக இருக்கும் நேரத்தில் நாகை மாவட்டம் தேமங்கலம், அடிபள்ளம், வங்கார மாவடி, கடம்பரவாழ்க்கை, பெருங்கடம்பனூர், சீயாத்தமங்கை, திருமருகல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் டிகேஎம் 13, சொர்ணாசப், பிபிடி உள்ளிட்ட நெல் ரகங்களில் புகையான் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சம்பா பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் புகையான் நோய் தாக்குதல் காரணமாக நெற்கதிர்கள் பதராக மாறியுள்ளது.

இதனால் விவசாயிகள் கடும் மனஉளைச்சல் அடைந்துள்ளனர். வங்கிகளில் கடன் வாங்கி சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற் பயிர்கள் இப்படி பதராக மாறி இருப்பதை கண்டு விவசாயிகள் எவ்வாறு வங்கி கடனை செலுத்த முடியும் என்று விரக்தியில் இருந்தனர்.புகையான் நோய் தாக்குதல் காரணமாக மிகபெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். எனவே வேளாண்துறை அதிகாரிகள் பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : paddy land ,Samba ,
× RELATED சம்பா அறுவடைக்கு பின் உளுந்து சாகுபடி...