×

திருச்சி சரக டிஐஜி உத்தரவின்பேரில் நடவடிக்கை கரூர் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் சிறு நூலகம் அமைப்பு

கரூர், ஜன. 21: திருச்சி சரக டிஐஜி உத்தரவின் பேரில், சரகத்துக்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் மினி (சிறு) நூலகம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. திருச்சி சரகத்தில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்கள் உள்ளன. கரூர் மாவட்டத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் உட்பட 17க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களும், திருச்சி மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களும், பெரம்பலூர் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களும், அரியலூர் மாவட்டத்தில் 12க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் என திருச்சி சரகத்தில் 100க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் உள்ளன. அனைத்து காவல் நிலையங்களிலும் ஆயிரக்கணக்கான போலீசார் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் அனைத்து காவல் நிலையங்களிலும் மினி (சிறு) நூலகங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இதன்படி, முக்கியமான நாளிதழ்கள், வார இதழ்கள், நம்பிக்கை, மன உறுதியை வளர்க்கும் நாவல்கள், ஆன்மீகம், நல்லிணக்கம் சம்பந்தமான நூல்கள் போன்றவை வாங்கப்பட்டு, காவல் நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டு மினி நூலகம் போல செயல்படவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
டிஐஜி உத்தரவின்பேரில், கரூர் மாவட்ட எஸ்பி பாண்டியராஜன் ஏற்பாட்டின் பேரில், கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மினி நூலகம் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. பொதுமக்களுக்கு நிகராக, காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் போலீசாரும் தினம் தினம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது தங்களை ஆசுவாசுப்படுத்திக் கொண்டு தினமும் நாளிதழ்களை சிறிது நேரம் படித்தால், பிரச்னைகளில் இருந்து விடுபடவும், தெளிவான சிந்தனையும், முக்கிய விஷயங்களை அவ்வப்போது தெரிந்து கொள்ளும் வகையிலும் மினி நூலகம் அமைக்க அதிகாரிகள் உத்தரவிட்டதன்பேரில் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வாசிப்பு திறனை மேம்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில், பொது நூலகத்துறை சார்பில் பல்வேறு யுக்திகள் கையாளப்பட்டு வருகிறது. இதனடிப்படையில், காவல்துறையிலும் இதே போன்ற ஒரு நல்ல ஏற்பாட்டினை உயரதிகாரிகள் மேற்கொண்டதால் அனைத்து போலீசாரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Trichy Charaka DIG ,
× RELATED குளித்தலையில் மாணவரை ஆயுதங்களால் தாக்கிய வாலிபர் கைது