×

பொதுமக்கள் எதிர்பார்ப்பு கிழக்கு தவிட்டுப்பாளையம் வீரராஜபுரத்தில்

கரூர், ஜன. 21: கிழக்கு தவிட்டுப்பாளையம் வீரராஜபுரத்தில் சுடுகாட்டு நிலத்தில் ஆக்ரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கிழக்கு தவிட்டுப்பாளையம் வீரராஜபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அன்பழகனிடம் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:
இந்த பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள மூன்று பிரிவினர்களுக்கு சொந்தமான சுடுகாட்டு நிலத்தை சிலர் ஆக்ரமித்துள்ளனர். எனவே, சுடுகாட்டில் உள்ள ஆக்ரமிப்பினை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதே போல் குளித்தலை தாலுகா கல்லரை கிராம பகுதியை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி அய்யர் என்பவர் வழங்கிய மனுவில், தோகைமலை ஒன்றிய பகுதிகளில் உள்ள 6 குளங்கள் சிலரால் ஆக்ரமிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர், இந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

மாற்று திறனாளி மனு: லாலாப்பேட்டையை சேர்ந்த மாற்றுத்திறனாளி நாகராஜ் என்பவர் கொடுத்த மனுக்களில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்ற வேண்டும். லாலாப்பேட்டை, திம்மாச்சிபுரம், மகாதானபுரம், சித்தலவாய் போன்ற பகுதிகள் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ளது. மேலும், குளித்தலை, மருதூர், அய்யர்மலை, பஞ்சப்பட்டி ஆகிய சுற்று வட்டார பகுதி மக்களுக்கு எதிர்பாராத விதமாக விபத்து மற்றும் தீக்காயங்கள் ஏற்பட்டால் கரூர் மற்றும் திருச்சி போன்ற மருத்துவமனைகளுக்கு செல்ல நேரிடுவதால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே குளித்தலை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதே போல் லாலாப்பேட்டை பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி, வீடுகளில் மின்சாரம், தொழில் செய்யும் பகுதிகள் போன்ற பகுதிகளில் மின்சாரம் தடைபட்டால் அதை சரி செய்ய மின்வாரியம் சார்பில் மின்கம்பம் ஏறும் பணியாளர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும். கிருஷ்ணராயபுரம் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள கழிவறை கதவுகள் இல்லாமல் உள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி கதவுகள் அமைக்க தேவையான உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் கொடுத்தார்.

Tags : Public Expectations East ,
× RELATED தோகைமலை அருகே முள்காட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்றபெண் கைது