×

குடியரசு தினவிழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் உஷார்

புதுச்சேரி, ஜன. 21: குடியரசு தினவிழாவுக்காக உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் அணிவகுப்பு ஒத்திகை தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் குடியரசு தினவிழா வருகிற 26ம்தேதி கொண்டாடப்படுகிறது. புதுவையில் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் கவர்னர் கிரண்பேடி கொடியேற்றுகிறார். விழாவில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். விழாவையொட்டி காவல் துறையினரின் அணிவகுப்பும், மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. இதுதவிர பல்வேறு துறைகளின் அலங்கார வண்டிகளின் அணிவகுப்பும் நடைபெறுகிறது. குடியரசு தினவிழாவுக்கான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

உப்பளம் மைதானத்தில் காவல்துறையினர் மட்டுமின்றி தீயணைப்பு துறையினர், முன்னாள் ராணுவ வீரர்கள், என்சிசி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மைதானத்தில் விழா மேடை, பந்தல் அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. அணிவகுப்பு இறுதிஒத்திகை 24ம்தேதி டிஜிபி பாலாஜி வஸ்தவா மேற்பார்வையில் நடைபெறுகிறது. அசம்பாவிதம் தடுக்க 500 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதையொட்டி புதுவை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. விழா நடைபெறும் உப்பளம் மைதானத்திலும் தீவிர கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. ரயில், பஸ் நிலையங்களில் காவல்துறையினரின் ரோந்து பணியும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Tags : Republic Day ,
× RELATED சர்வதேச மகளிர் தினம்: சிறப்பு டூடுல் வெளியிட்டு கொண்டாடிய கூகுள்!!