×

என்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல் அடுத்தமாதம் வெளியீடு

புதுச்சேரி, ஜன. 21: என்ஆர் காங்கிரசின்  அனைத்து நிலை நிர்வாகிகள் பட்டியல் பிப்ரவரி மாதத்துக்குள் வெளியிடப்படும்  எனவும்,  தொடர்ந்து அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும், பிரமாண்ட  மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கட்சியின் மூத்த நிர்வாகிகள்  தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் பிரதான எதிர்க்கட்சியான என்ஆர்  காங்கிரஸ் கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக  ஆரம்பிக்கப்பட்டது. கட்சி ஆரம்பித்து சில நாட்களில் ஆட்சியை பிடித்து  ரங்கசாமி முதல்வரானார். அதனை தொடர்ந்து 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் 8  இடங்களை மட்டுமே பெற்று என்ஆர் காங்., ஆட்சியை  இழந்தது. தொடர்ந்து நடந்த  பாராளுமன்ற தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல்களிலும் என்.ஆர் காங்கிரசால்  வெற்றிபெற முடியவில்லை.  தொடர் தோல்விகளால் என்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள்  துவண்டு போனார்கள். அமைப்பு ரீதியாக  வலுவாக  இல்லாததே  தோல்விக்கு காரணம் என ரங்கசாமியிடம் மூத்த நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்.  ஆனால் அவர் இதன் மீது ஆர்வம் காட்டவில்லை.  கட்சி ஆரம்பித்தபோது நியமித்த  பொறுப்பாளர்கள் மட்டுமே தற்போது வரை உள்ளனர். ஜனநாயக ரீதியாக உட்கட்சி  தேர்தலை நடத்தி நிர்வாகிகளை நியமிக்கவில்லை. இதற்கிடையே கடந்த பாராளுமன்ற  தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்துக்கு திலாசுப்பேட்டையை சேர்ந்தவர்  புகார் மனு அனுப்பினார். அதில் என்ஆர் காங்கிரஸ் கட்சியை ஜனநாயக முறைப்படி  நடத்தவில்லை. எனவே அக்கட்சிக்கான அங்கீ
காரத்தை ரத்து செய்ய வேண்டும்.  சின்னத்தை ஒதுக்க கூடாது என தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக  விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.  இதையடுத்து ஏற்கனவே  தேர்வு செய்யப்பட்டிருந்த நிர்வாகிகள் பட்டியலை என்ஆர் காங்கிரஸ் தேர்தல்  ஆணையத்துக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இதுவரை தேர்தல் ஆணையத்திடம் இருந்து  அந்த பட்டியலுக்கு ஒப்புதல் கடிதம் வரவில்லை. இந்நிலையில்  ரங்கசாமி, என்ஆர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகளைஅறிவித்துள்ளதாக நேற்று சமூக  வலைதளங்களில் தகவல் வெளியானது. பலரும் என்ன பொறுப்பு யாருக்கு  வழங்கப்பட்டுள்ளது என தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர். இதற்கிடையே இது  2018-2019ம் ஆண்டுக்கான பழைய பட்டியல் என தெரியவந்தது. இதனை திட்டமிட்டு  யாரோ விஷமிகள் வெளியிட்டுள்ளதாக என்ஆர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது  குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, தேர்தல் ஆணையத்துக்கு  ஏற்கனவே நிர்வாகிகள் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல்  அளித்து, இன்னும் கடிதம் வரவில்லை. இதனிடையே சில விஷமிகள் இதனை  வேண்டுமென்றே சமூகவலைதளத்தில் பரவ விட்டுள்ளனர். பிப்ரவரி மாதம் 7ம்  தேதிக்குள் அனைத்து நிர்வாகிகள் பட்டியலும் வெளியிடப்படும். இதனை கட்சி  தலைவர் ரங்கசாமி முறைப்படி அறிவிப்பார். மேலும் வரும்  சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சி பணிகள் முடுக்கிவிடப்படும்.  ஆளும் அரசுக்கு எதிரான தோல்விகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில்  மாவட்டம், தொகுதி அளவில் போராட்டம் நடத்தப்படும். தொடர்ந்து கட்சியின்  பிரமாண்ட மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

Tags : executives ,NR Congress ,
× RELATED பாமக நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர்