×

விருத்தாசலம் நகரம், பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக தள்ளுவண்டியில் வியாபாரம் செய்யக்கூடாது

விருத்தாசலம், ஜன. 21: கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் மிக முக்கிய நகரமாக விளங்கி வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வதால் போக்குவரத்து மற்றும் பல்வேறு பாதிப்புகளால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து தொடர்ந்து பொதுமக்கள் அளித்துவரும் புகாரின்பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சார் ஆட்சியர் பிரவீன்குமார் தலைமையிலான வருவாய்த்துறை மற்றும் நகராட்சி துறை அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் விருத்தாசலம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றி வந்தனர். ஆனால் ஓரிரு நாட்கள்கூட இந்த ஆக்கிரமிப்பு அகற்றம் நீடிக்காமல் ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து வந்தனர். இதுகுறித்து இரண்டு நாட்களுக்கு முன் தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் காரணமாக நேற்று விருத்தாசலம் சார் ஆட்சியர் உத்தரவின்பேரில் டிஎஸ்பி இளங்கோவன் தலைமையில் விருத்தாசலம் காவல் நிலையத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் அம்பேத்கர் சாலையோர தள்ளுவண்டி வியாபாரிகள் சங்க சிறப்பு தலைவர் துரை, தலைவர் சீனு, துணைத்தலைவர் செல்வம், செயலாளர் சுந்தரசெல்வம், பொருளாளர் சீனு, சங்க அமைப்பாளர் மருதையன் மற்றும் பேருந்து நிலைய தள்ளுவண்டி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விருத்தாசலம் நகரத்திற்கு உட்பட்ட கடைவீதி, பாலக்கரை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்பவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் நீட்டிக்கொண்டு விற்பனை செய்யக்கூடாது. நடைபாதை பகுதிகளில் பொதுமக்கள் நடக்கும் அளவுக்கு பாதைகளை விடுவிக்க வேண்டும். பூ கடைகள் மற்றும் பழக்கடைகள் பேருந்து நிலையத்திற்குள் செல்லக்கூடாது. மேலும் பழைய மார்க்கெட் இயங்கிவந்த காலியிடத்தில் தள்ளுவண்டி கடைக்காரர்கள் மட்டும் நிறுத்தும் அளவிற்கு வழிவகை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என டிஎஸ்பி இளங்கோவன் கூறினார்.

Tags : public ,bus station ,
× RELATED அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே...