×

மாவட்டத்தில் 95% குழந்தைக்கு போலியோ சொட்டு

திருப்பூர், ஜன.20: திருப்பூர், 94.9 சதவீதம் குழந்தைகளுக்கு நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நாடு முழுவதும் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து நேற்று காலை முதல் மாலை வரை வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் 1,154 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டது. இதற்காக போலியோ சொட்டு மருந்து ஆங்காங்கே உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், டோல்கேட் மற்றும் தனியார் சொட்டு மருந்து முகாம் மையங்களிலும் இவற்றில் 26 நடமாடும் சொட்டு மருந்து முகாம்களிலும், 23 போக்குவரத்து முகாம்களிலும், போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இப்பணிக்காக பல்வேறு துறைகளைச் சார்ந்த 4,922 பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 2.27 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டு 2 லட்சத்து 15 ஆயிரத்து 708 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. அதன்படி 94.9 சதவீதம் வழங்கப்பட்டது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உடுமலை:உடுமலை மடத்துக்குளம் தாலுகாக்களில் நேற்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.உடுமலை  அரசு மருத்துவமனையில் நேற்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்  குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமை துவக்கி வைத்து பேசுகையில், ‘‘திருப்பூர் மாவட்டத்தில் 1154 மையங்களில்  இரண்டு லட்சத்து 27 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து  வழங்கப்படகிறது.

இதற்காக அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார  நிலையங்கள் ரயில் நிலையம் பேருந்து நிலையம், அங்கன்வாடி மையம் இதுதவிர  நடமாடும் மருத்துவ ஊர்தி இவற்றின் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. போலியோ  சொட்டு மருந்து பணிக்காக மாவட்டம் முழுவதும் 4,616 ஊழியர்களும் ரோட்டரி  சங்க நிர்வாகிகளும் ஈடுபட்டுள்ளனர்,’’ என்றார்.உடுமலை நகரில் 4  ஆயிரத்து 995 குழந்தைகளுக்கும் உடுமலை ஒன்றியத்தில் 17,500  குழந்தைகளுக்கும் குடிமங்கலம் நான்காயிரத்து 500 குழந்தைகளுக்கும்  மடத்துக்குளம் ஒன்றியத்தில் 5 ஆயிரத்து 300 குழந்தைகளுக்கும் நேற்று போலியோ  சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

மடத்துக்குளம் ஒன்றியத்தில் ஒன்றிய குழு  தலைவர் காவியா துணைத் தலைவர் ஈஸ்வரன் சாமி ஆகியோர் ஆரம்ப சுகாதார  நிலையங்களுக்கு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினர்.உடுமலை  ரோட்டரி தேஜஸ் சங்கம் சார்பில் உடுமலை பார்க் நடுநிலைப்பள்ளியில் பட்டய  தலைவர் சக்கரபாணி தலைவர் ரவி ஆனந்த் செயலாளர் சத்தியம் பாபுஉறுப்பினர்கள்  பாலமுருகன், மணிகண்டன் மற்றும் பலர் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து  வழங்கினர்.
தாராபுரம்:திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் புதிய பேருந்து நிலையம், சர்ச்சாலை, தாராபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 17 இடங்களில் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இந்த சிறப்பு முகாமில் 3900 குழந்தைகளுக்கு  போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது.புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்ற முகாமை எம்எல்ஏ காளிமுத்து துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தேன்மொழி, நகர் நல அலுவலர் டாக்டர் லட்சுமி நாராயணன், சுகாதார மருத்துவ அலுவலர் கணேஷ் குமார், ரோட்டரி சங்கம் கமலகண்ணன், பெர்ணார்டு, வீராகணேஷ், சண்முகராஜ், பாசில் முகமது, கீர்த்தி,கஸ்தூரி
மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்.

காங்கயம்: காங்கயம் வட்டாரத்தில் உள்ள காங்கயம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், நத்தக்காடையூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பாப்பினி பச்சாபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 56 மையங்கள் அமைக்கப்பட்டு 5 வயதிற்கு உட்பட்ட 5720 குழந்தைகளுக்கு வட்டார  மருத்துவ அலுவலர் டாகடர் முரளி தலைமலையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. வெள்ளகோவில்:வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் போலியோ நோய் ஒழிப்பு முகாம் நகராட்சி அலுவலகம், பஸ் நிலையம், சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், ஊராட்சி பள்ளிகள் உட்பட 20 இடங்களில் முகாம் நடைபெற்றது. இதில் 3203 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜலட்சுமி மற்றும்  மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் செய்திருந்தனர்.

பொங்கலூர்:திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையில் பொங்கலூர் ஒன்றியக் குழு பெருந்தலைவர் வக்கீல் குமார் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார். பொங்கலூர் ஊராட்சித் தலைவர் பாலசுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : children ,district ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...