×

பொங்கல் பண்டிகை விடுமுறை நிறைவு ஊர் திரும்பிய சுற்றுலா பயணிகள்

ஊட்டி, ஜன. 20: பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை நேற்றுடன் முடிவடைந்ததால் ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஊர் திரும்பினர். இதனால் பஸ் நிலையம் பயணிகள் கூட்டத்தால் அலைமோதியது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்ததால் முக்கிய சுற்றுலா தளங்கள் களைகட்டின. மேலும், பெரும்பாலான லாட்ஜ், காட்டேஜ்கள் நிரம்பின. சமவெளி பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு வந்தனர்.

இவர்களுக்கும் பொங்கல் பண்டிகை விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்தது. இதனால் ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் தங்கள் ஊர்களுக்கு திரும்ப துவங்கினர். இதனால் மத்திய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக கோவை, ஈரோடு உள்ளிட்ட சமவெளி பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் ஒரு சில பயணிகள் பஸ்சில் இடம் பிடிப்பதற்காக ஏ.டி.சி., சேரிங்கிராஸ் பகுதிகளில் இருந்து ஏறி வந்ததால் பஸ் நிலையத்தில் இருந்தவர்களுக்கு இடம் கிடைக்காமல் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பொங்கல் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்பும் சுற்றுலா பயணிகள் மற்றும் வேலைகளுக்காக சமவெளி பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களுக்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகம் ஊட்டி மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக நீலகிரி மாவட்டத்தில் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களை சமவெளி பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. இவை போதுமான பராமரிப்பு இல்லாததால் 3க்கும் மேற்பட்ட பஸ்கள் பழுதடைந்து பாதியிேலயே நின்றன. இதனால் அதில் பயணித்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். குறித்த நேரத்தில் பஸ்கள் இயக்கப்படாத நிலையில், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பலர் கூடுதல் கட்டணம் கொடுத்து தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து சென்றதையும் காண முடிந்தது.

Tags : holiday ,Pongal ,
× RELATED சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் 19ஆம் தேதி விடுமுறை!