×

பனிமூட்டத்துடன் சாரல் மழை

ஊட்டி, ஜன. 20: நீலகிரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் துவங்க வேண்டிய பனி சீசன் மிகவும் தாமதமாக கடந்த 6ம் தேதி தான் துவங்கியது. தாமதமாக துவங்கினாலும் உறைபனி பொழிவின் தாக்கம் சற்று தீவிரமாக இருந்தது. அதிகாலை சமயங்களில் ஊட்டி தாவரவியல் பூங்கா புல் மைதானம், குதிரை பந்தய மைதானம், சூட்டிங்மட்டம் புல்வெளிகள், கேத்தி பாலாடா, முத்தோரை பாலாடா உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி வெள்ளை கம்பளம் விரித்தது போல் கொட்டியது. மேலும் உறைபனி பொழிவு காரணமாக கடும் குளிர் நிலவியதால் அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதிக்குள்ளாகினார்கள். காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்தது. குறிப்பாக மஞ்சூர், கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவியதால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியவில்லை.

இதனால் நேற்று காலை வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். அரசு பஸ்கள், கார்கள் உள்ளிட்டவைகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்ட படியே சாலைகளில் சென்றன. ஊட்டியிலும் சாரல் மழை பெய்த போதும், அதன் தாக்கம் குறைவாகவே இருந்தது. பனிமூட்டமும் குறைவாகவே இருந்தது. திடீர் சாரல் மழை காரணமாக குளிர் முற்றிலும் குறைந்து காணப்பட்டது. இதனிடையே காலை 11 மணிக்கு பிறகு பனிமூட்டம் மற்றும் மழை குறைந்து இதமான காலநிலை நிலவியது. மாலை 3 மணிக்கு மேல் மீண்டும் மந்தமான காலநிலை நிலவியது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு (மி.மீ.,: ஊட்டி 1, குந்தா 7, அவலாஞ்சி 2, கெத்தை 6, எமரால்டு 1, கிண்ணக்கொரை 14, குன்னூர் 20, கேத்தி 6, பர்லியார் 2, கோத்தகிரி 14, கொடநாடு 16 என மொத்தம் 89 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...