×

ராஜபாளையத்தில் வாறுகால் அடைப்பால் சாலையில் ஓடும் சாக்கடை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

ராஜபாளையம், ஜன. 20: ராஜபாளையத்தில் வாறுகால் அடைப்பால் ஒரு மாத காலமாக சாலையில் சாக்கடை கழிவுநீர் ஓடுகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இது குறித்து தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் செய்வதாக புகார் தெரிவித்துள்ளனர்.ராஜபாளையத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு குழாய் பதிப்பதற்காக, சங்கரன்கோவில் விலக்கில் இருந்து சத்திரப்பட்டி செல்லும் சாலையோரம் பள்ளம் தோண்டினர். குழாய் பதித்த பின்னர் பள்ளத்தை முறையாக மூடவில்லை. இதனால், சாலையின் நடுப்பகுதி வரை குண்டும் குழியுமாக உள்ளது.

இந்நிலையில், பள்ளம் தோண்டும்போது, கழிவுநீர் வாறுகாலில் மண் சரிந்ததால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கழிவுநீர் செல்ல வழியின்றி கடந்த ஒரு மாதமாக சாலையில் கழிவுநீர் ஓடுகிறது. இந்த வழியாக செல்லும் பஸ், லாரி, வேன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் நன்றாக இருக்கும் சாலையில் செல்கின்றனர். ஆனால் டூவீலர், சைக்கிள் மற்றும் நடந்து செல்வோர், சேதமடைந்துள்ள செம்மண் சாலையில் செல்ல வேண்டி உள்ளது.செம்மண் சாலையில் உள்ள பள்ளங்களில் சாக்கடை நீர் தேங்கி, இப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்துகிறது. நெரிசலான நேரங்களில் கனரக வாகனங்கள் பள்ளத்தில் இறங்கும்போது, தேங்கி உள்ள கழிவுநீர் டூவீலர், சைக்கிள் மற்றும் பாதசாரிகள் மீது தெறிக்கிறது. சில நேரங்களில் கடைகளுக்குள்ளும், அருகே உள்ள வீடுகளுக்கு உள்ளேயும் கழிவுநீர் தெறிக்கிறது. இதனால், வியாபார கடைகளின் உள்ளே துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் சாலையில் இருந்து எழும் செம்மண் தூசியால் இப்பகுதியில் வசிப்போர் மற்றும் கடை வைத்திருப்போர் சுவாச கோளாறால் பாதிப்படைகின்றனர். சாக்கடை அடைப்பை சீரமைக்க கோரி பல முறை நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மக்களின் புகாரை நகராட்சி துறையினர் அலட்சியம் செய்வதாக கூறப்படுகிறது. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு வாறுகால் அடைப்பை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கடைக்காரர் யேசுதாஸ் கூறுகையில், ‘ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில், வாறுகால் அடைப்பால் கடந்த ஒரு மாத காலமாக சாக்கடை கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். வாறுகால் அடைப்பை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.இது குறித்து நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாளிடம் கேட்ட போது, வாறுகால் அடைப்பை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தார்.

Tags : public ,sewer motorists ,road ,Rajapalayam ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி