×

சிதிலமடைந்த பிஏபி பிரதான கால்வாய்

உடுமலை,  ஜன.20:திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும்  தண்ணீர் பிரதான கால்வாய் வழியாக செல்கிறது. 127 கிமீ., தொலைவு நீளமுடைய  பிரதான கால்வாய் திருமூர்த்தி அணையில் துவங்கி வெள்ளகோவில் வரை  சென்றடைகிறது. இந்த கால்வாயின் பெரும்பாலான பகுதிகளில் கரைகள் உடைந்து,  சிதிலமடைந்து, உள்வாங்கி காணப்படுகிறது. இதன் காரணமாக கடைமடை வரை தண்ணீர்  செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

பிஏபி பாசன திட்டத்தின் கீழ் 3.77  லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கு நான்கு மண்டலங்களாக குறிப்பிட்ட கால  இடைவெளி விட்டு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு  வருகிறது. பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் பிரதான கால்வாய் வழியே  பயணித்து கடைமடை விவசாயிகளை சென்றடைவதற்குள் கடைமடை பகுதியில்  பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் தண்ணீரின்றி மகசூல் இன்றி விவசாயிகளுக்கு பெரும்  நஷ்டம் ஏற்படுகிறது. குறிப்பாக திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே  பங்களா மேட்டிலிருந்து மொடக்குப்பட்டி வரையிலான 8 கிமீ., தொலைவிலான  வாய்க்காலில் கரைகள் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.

இதுகுறித்து  அப்பகுதி விவசாயிகள் பொதுப்பணித்துறையிடம் அளித்த கோரிக்கை மனுவின் பேரில்  அதிகாரிகள், சேதமடைந்த கரை பகுதியை பார்வையிட்டு ஆய்வு நடத்தி, கால்வாயை  சீரமைக்க அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினர். 2014ம் ஆண்டு பிஏபி  கால்வாய் கரைகளை சீரமைப்பதற்காக மண் பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டது. ஆறு  ஆண்டுகள் கடந்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும்  நடைபெறவில்லை. சேதமடைந்த கல்வாய்களால் ஒவ்வொரு முறையும் பிரதான கால்வாயில்  திறந்துவிடப்படும் தண்ணீர் வீணாக வெளியேறி வருவதால் கடைமடை பகுதி  விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். கோடை காலத்திற்கு முன்பாக அணையில்  இருந்து பாசனத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரை கடைமடை வரை சீராக  செல்வதற்கு ஏற்ற வகையில் கால்வாயின் கரைகளை போர்க்கால அடிப்படையில்  புனரமைத்து தரும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : PAP ,canal ,
× RELATED பிஏபி முதலாம் மண்டல பாசனத்தில் முதல் சுற்று நிறைவு