×

ஓடிபி நம்பர் திருட்டைத் தடுக்க புதிய செயலி ஏடிஎம் கார்டு இல்லாமல் இனி பணம் எடுக்கலாம்

தேனி, ஜன. 20:  வங்கி வாடிக்கையாளர்களின் ஏடிஎம் கார்டுகளை ேஹக் செய்து, பின் நம்பர், ஓடிபி நம்பர்களை திருடி மோசடிக்கும்பல், அவர்களது அக்கவுண்ட்டில் இருந்து பணம் எடுப்பதை தடுக்க வங்கிகள் புதிய செயலியை வடிவமைத்துள்ளன. தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ள இந்த செயலி மூலம் ஏடிஎம், கார்டு இல்லாமல், வாடிக்கையாளரே ஒவ்வொரு முறையும் ஓடிபி நம்பரை தேர்வு செய்து, வங்கியில் பணம் எடுக்கலாம்.
வங்கிகளில் நிதி மோசடிகளில் ஈடுபடும் கும்பலிடம் இருந்து தமது வாடிக்கையாளர்களை காப்பாற்றுவது தான் வங்கிகளுக்கு இன்றுள்ள மிகப்பெரிய சவாலாக உள்ளது. வங்கி ஊழியர்களுக்கு திறம்பட பயிற்சி அளித்தாலும், புதிய புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வந்தாலும், அப்பாவி வாடிக்கையாளர்கள், குறிப்பாக பெண் வாடிக்கையாளர்கள் இந்த மோசடி கும்பலிடம் சிக்கிக் கொள்கின்றனர்.
வங்கிகளின் கணக்குப்படி தினமும் ஒரு மாவட்டத்தில் 10 முதல் 15 அப்பாவிகளாவது இந்த மோசடி கும்பலிம் ஏமாற்றம் அடைந்து பணத்தை இழக்கின்றனர். சில நேரங்களில் மிகப்பெரிய, திறமையான வாடிக்கையாளர்களே சிக்கி பணத்தை இழந்து விடுகின்றனர்.

தவிர ஏடிஎம்களில் ஸ்கிம்மர் கருவிகளை பொறுத்தி, கார்டுகளை ஸ்கேன் செய்து வாடிக்கையாளர்களிடம் பேசி, ஓடிபி வாங்கி பணம் திருடுவது ஒரு வகை. இந்த வகையில் ஒரு அக்கவுண்டில் இருந்து வேறு எந்த அக்கவுண்டிற்கு பணம் பறிமாற்றம் செய்யப்படுகிறது என்பது உடனே கண்டறியப்பட்டால், வங்கிகளே அந்த பணத்தை வாடிக்கையாளர்களுக்கு மீட்டு கொடுத்து விடுகின்றனர்.இதனால் இந்த மோசடி கும்பல் தங்களது மொபைல் ஆப் மூலம் வங்கி வாடிக்கையாளர்களின் அக்கவுண்டை இயக்கி, அவர்களிடம் பேசி ஏமாற்றி ஓடிபி நம்பரை வாங்கி பர்சேஸ் செய்து விடுகின்றனர். இப்படி பர்சேஸ் செய்யப்பட்டால் அந்த பணத்தை மீட்பது சிரமம். தவிர வங்கிகளில் தற்போது உள்ள பணிச்சுமையில், தினமும் தனது வாடிக்கையாளர்கள் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்து தவிப்பதை பார்த்து அவர்களது பணம் எங்கே போனது என்று மீட்டுக் கொடுப்பது, அவர்களுக்கு புதிய ஏடிஎம் கார்டுகளை போட்டுக் கொடுப்பது என கூடுதல் வேலை செய்ய வேண்டி உள்ளது. இதில் பல போலீஸ் குடும்பங்கள் மட்டுமின்றி, போலீஸ் அதிகாரிகளே கூட சிக்கி விடுகின்றனர் என்பது தான் மோசடி கும்பலின் தெளிவான அணுகுமுறைக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண வங்கிகள் புதிய செயலியை (ஆப்) உருவாக்கி உள்ளன. பாரத ஸ்டேட் வங்கியில் தற்போது இந்த ஆப் உருவாக்கும் பணிகள் நிறைவடைந்து சோதனை இயக்கம் நடந்து வருகிறது. ஒரு சில வாடிக்கையாளர்கள் புதிய ஆப்பினை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.இந்த ஆப்பினை தனது மொபைலில் வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்து, வங்கியுடன் தொடர்பு கொள்ள முடியும். வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க வேண்டும் என்றால், அவர்களே இந்த ஆப் மூலம் புதிய ஓடிபி நம்பரை தேர்வு செய்து வங்கிக்கு அனுப்ப வேண்டும். வங்கிகள் ஓகே செய்தவுடன் அந்த ஓடிபி நம்பரை ஏடிஎம் இயந்திரத்தில் பதிவு செய்து பணம் எடுத்துக்கொள்ளலாம். அதேசமயம் ஏடிஎம் கார்டுகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த ஆப் முழு அளவில் செயல்பாட்டிற்கு வந்து விடும்.

ஒவ்வொரு வங்கியும், இந்த ஆப்பினை எப்படி செயல்படுத்துவது என்பதை தனது வாடிக்கையாளர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்க தனி அலுவலர்களை நியமித்து வருகிறது. இந்த புதிய தொழில்நுட்பம் முழு பயன்பாட்டிற்கு வந்து விட்டால், வங்கி மோசடிகள் குறைந்து விடும். அந்தளவு திட்டமிட்டு இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது என தேனி வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : theft ,OTP ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...