×

தேவாரத்தில் காட்டுயானைகள் மீண்டும், மீண்டும் அட்டகாசம் ரோந்துபடை அமைக்குமா வனத்துறை?

தேவாரம், ஜன.20:  தேவாரம் மலையடிவாரத்தை ஒட்டி உள்ள நிலங்களில் கூட்டமாக திரியும் 3 யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இதனை விரட்ட சிறப்பு ரோந்து படையை வனத்துறை அமைக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவாரம் சாக்குலூத்துமெட்டு அடிவாரம், பண்ணைப்புரம் தீக்குண்டு, சதுரங்கப்பாறை, உள்ளிட்ட பல்வேறு அடிவாரப்பகுதிகளில் முகாமிட்டுள்ள ஒரு குட்டி மற்றும் இரண்டு யானைகள்  தொடர்ந்து கப்பை, தென்னை, மா, உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. அத்துடன் முள்வேலிகளை உடைத்தும், குறிவைத்தும் அட்டகாசம் செய்யும் யானைகள் கூட்டம் ஆக்ரோஷமாக கடந்த 20 நாட்களில் மட்டும் 300 இளம் தென்னை மரங்களை  அடித்து துவம்சம் செய்துள்ளது. கூட்டமாக திரியும் யானைகளின் அட்டகாசத்தினால் விவசாயிகள் இரவு நேரங்களில் தோட்டத்து வீடுகளில் தங்குவதை தவிர்த்து வருகின்றனர். சாக்குலூத்து மெட்டு அடிவாரத்தில் இப்போதும் தென்னையின் குருத்துக்களை குறிவைத்து இவை சேதம் செய்கின்றன.

இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் சபரிமலை சீசன் தொடங்கும் நவம்பர் முதல் வாரத்தில் இறங்கி பிப்ரவரி மாதம் வரை தேவாரம் மலையடிவாரத்தில் காட்டுயானைகள் கூட்டம் அட்டகாசம் செய்கிறது. இதன்பின்பு ஒற்றையாக திரியக்கூடிய மக்னா யானை அட்டகாசத்தை தொடர்கிறது. எனவே, தேனிமாவட்ட வனத்துறை சிறப்பு ரோந்து படையை உருவாக்கிட வேண்டும். இவர்களுக்கு அதிகமான ஒலி எழுப்பக்கூடிய சைரன் வாகனத்தை தந்தால் மலையடிவாரத்தில் சப்தம் எழுப்பி விரட்ட முடியும். இதற்கென சிறப்புஅதிகாரிகளை நியமிக்க மாவட்ட கலெக்டர் பரிந்துரைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சைரன் ஒலியுடன் கூடிய ஜீப், சிறப்பு ரோந்துப்படை அதிகாரிகள் என வனத்துறையை நவீனப்படுத்தி தேவாரம் மலையடிவாரத்தில் நிரந்தரமாக முகாம் அமைக்கவேண்டும். இதனால் விவசாய பயிர்கள் தப்பும். யானைகளும் இறங்காது’’ என்றனர்.

Tags : forest department ,forests ,
× RELATED கொல்லிமலை காப்புக்காட்டில் சுற்றுலா...