×

காலிங்கராயர் தினத்தையொட்டி காலிங்கராயன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஈரோடு, ஜன. 20:   காலிங்கராயர் தினத்தையொட்டி ஈரோடு அருகே உள்ள  காலிங்கராயன் மணிமண்டபத்தில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஈரோடு  மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து வரும் பவானி ஆற்றுநீரை பவானி அருகே  காலிங்கராயன்பாளையம் பகுதியில் அணைக்கட்டப்பட்டு அங்கிருந்து வாய்க்கால் மூலமாக  கொடுமுடி ஆவுடையார்பாறை வரை தண்ணீர் பாய்ந்து செல்கிறது. விவசாயிகளின் நலனுக்காக  இந்த வாய்க்காலை வெட்டிய காலிங்கராயன் தை மாதம் 5ம் தேதி வாய்க்காலை  பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார். இந்த நாளை காலிங்கராயன் தினமாக கொண்டாட  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று ஈரோடு அருகே  காலிங்கராயன்பாளையம் காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள  மணிமண்டபத்தில் காலிங்கராயன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.  இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.

இதில் பள்ளி  கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன்  ஆகியோர் கலந்து கொண்டு காலிங்கராயன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினர்.  இதில், மாவட்ட எஸ்.பி.சக்திகணேசன், எம்.எல்.ஏ.க்கள்  தென்னரசு, ராமலிங்கம், ராஜாகிருஷ்ணன், தனியரசு, மாவட்ட வருவாய் அலுவலர்  கவிதா, மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன்,  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், ஈரோடு வருவாய்  கோட்டாட்சியர் முருகேசன், நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பு பொறியாளர்  காசிலிங்கம், செயற்பொறியாளர் தாமோதரன், ஈரோடு தாசில்தார் ரவிச்சந்திரன்,  முன்னாள் துணை மேயர் பழனிச்சாமி, உதவி ஆணையர் அசோக்குமார் மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.

இந்த விழாவில், காலிங்கராயரின் வாரிசுதாரர் அருண்குமார்  காலிங்கராயருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டார். மேலும் அங்கு நடந்த கண்காட்சியில் காலிங்கராயன் அணைக்கட்டின்  வரலாறு, தமிழக அரசின் சாதனைகள் போன்றவைகள் புகைப்படங்களாக இடம்  பெற்றிருந்தது. தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் காலிங்கராயர்  தினத்தையொட்டி, காலிங்கராயன் மணிமண்டபத்தில் சிலைக்கு மாலை அணிவிக்கும்  நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார்  தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளரும், விடியல்சேகர் கலந்து கொண்டு சிலைக்கு மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், மாநில செயற்குழு  உறுப்பினர் சந்திரசேகர், செல்வராஜ், கவுதமன், வட்டார தலைவர் புவனேஸ்வரன்  மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கொங்கு வேளாளர்  அமைப்பின் சார்பில் காலிங்கராயர் தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மாலை  அணிவிக்கப்பட்டது. பின்னர் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.  இதில் வாரிசுதாரர் அருண்குமார் காலிங்கராயர் தலைமையில் பெண்கள் முளைப்பாரி  எடுத்து வந்து வாய்க்காலில் விட்டனர். இதில் கவுரவ தலைவர் ராமசாமி, தலைவர்  பவிஷ் நல்லசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : idol ,Kalingarayan ,Kalingarayar ,
× RELATED ஐதராபாத்திலிருந்து கடத்தி வந்த 15,000...