×

வைகையில் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு குடிநீர் ஆதாரம் பாதிக்கும் அபாயம்

மானாமதுரை, ஜன.20: வைகையாற்றில் பல கி.மீ தூரத்திற்கு அதிகரித்துவரும் சீமை கருவேலமரங்களால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவுகிறது. மரங்களை அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை ரிங்ரோடு அருகே உள்ள வைகை பாலத்திலிருந்து பார்த்திபனூர் மதகு அணை வரை நாணல்கள், கருவேலமரங்கள் பெருமளவில் வளர்ந்துள்ளன. மானாமதுரை வழியாக பரமக்குடி வரை செல்லும் வைகை ஆறு நகரை இரண்டாகப்பிரிக்கிறது. ஆற்றினை ஒட்டிய 13 வார்டுகளில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இக்குடியிருப்புகளில் உள்ள கிணறுகள், போர்வெல்களில் தண்ணீர் வற்றியதே இல்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக திருப்புவனம், லாடனேந்தல், சிறுகுடி உள்ளிட்ட ஆற்றின் அதிக மணல் வளமுள்ள பகுதிகளில் மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு பெருமளவு மணல் அள்ளப்பட்டதால் தற்போது வைகையாற்றில் மணல் வளம் குன்றிவிட்டது.

போதாக்குறைக்கு நாணல்கள், கருவேலமரங்கள் நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சுவதால் இடைவெளியின்றி நெருக்கமாக வளர்கின்றன. இவற்றை அழிக்க தவறியதின் விளைவாக கோடைகாலம் துவங்கும் முன்பே மானாமதுரை தாலுகாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இடைக்காட்டூர், ராஜகம்பீரம் பகுதிகளில் குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பில் 40க்கும் மேற்பட்ட குடிநீர்கிணறுகள் உள்ளன. கருவேலமரங்களின் ராட்சத வளர்ச்சியினால் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு நீர் ஊற்றுகள் வற்றும் நிலைக்கு சென்றுவருகிறது. ராமநாதபுரம், சிவகங்கை , விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கும் இங்கிருந்து தான் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இவற்றை அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் இரவில் பல சமூக விரோத சம்பவங்களும் நடக்கின்றன. ஆற்றின் மறுகரையில் உள்ள பனிக்கனேந்தல், கரிசல்குளம் கிராமங்களுக்கும், கன்னார்தெரு, ஆதனூருக்கு ஆற்றின் குறுக்கே நடந்து செல்பவர்கள் ஆற்றை கடக்க அச்சமடைந்துள்ளனர். சராசரியாக 8 அடி உயரம் வரை வளரும் பரந்து விரிந்த நாணல்கள் சமூக விரோதிகளுக்கு சாதகமாக உள்ளது. அதனால் குற்றங்கள் நடப்பதும், போலீசார் வழக்கு பதிவு செய்வதும் வாடிக்கையாகிவிட்டது.

இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த பிரபாகரன் கூறுகையில், மானாமதுரை பகுதியில் வைகையாறு சுகாதாரகேட்டால் மாசடைந்துள்ளது. ஆற்றில் தேங்கியுள்ள கழிவுநீர், கொட்டப்படும் குப்பைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கருவேலமரங்கள் வேறு வளர்ந்துள்ளதால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது. முன்பிருந்த கலெக்டர் ராதாகிருஷ்ணன் தன்னார்வ நிறுவனங்களின் உதவியுடன் ஆற்றை சுத்தம் செய்தார். தொடர்ந்து பராமரிக்கப்படாததால் ஆறு புதர்காடாக மாறிவருகிறது. வைகை ஆற்றில் கருவேல மரங்களை அகற்ற மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டும் அதனை அகற்ற இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Vaigai ,
× RELATED கடும் வெயிலால் வைகை அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவு