×

ஆந்திராவிற்கு ஒரே தலைநகரை வலியுறுத்தி கனக துர்க்கை அம்மன் கோயிலில் பெண்கள் சிறப்பு வழிபாடு

திருமலை, ஜன.20: ஆந்திராவிற்கு ஒரே தலைநகரை வலியுறுத்தி அமராவதியில் தலைநகர் அமைக்க நிலம் வழங்கிய பெண்கள் விஜயவாடா கனகதுர்க்கை அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். முன்னாள் முதல்வர் சந்திரபாபு ஆந்திர மாநில மையப்பகுதியில் தலைமைச் செயலகம் அமைக்க அனைத்து கட்சி தலைவர்களுடன் ஒருமனதாக சட்டமன்ற கூட்டத்தொடரில் முடிவெடுத்து, பின்னர் அமராவதியில் தலைமைச் செயலகம் கட்ட முடிவு செய்தார். அப்போது எதிர்க்கட்சியை சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் அமராவதியில் தலைமைச்செயலகம் அமைக்க குறைந்தது 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தேவைப்படும் என கூறினார். அதற்கு அமராவதியில் உள்ள 29 கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தானாக முன்வந்து விவசாய நிலங்களை தலைமைச்செயலகம் கட்ட வழங்கினர். அதற்கான பணிகளும் நடந்தது வந்தது. இந்நிலையில் தேர்தல் நடந்து ஆந்திராவில் ஆட்சி மாற்றம் நடந்தது.

இந்நிலையில் ஆந்திராவின் தற்போதைய தலைநகரான அமராவதியை சட்டப்பேரவை தலைநகராகவும், விசாகப்பட்டினத்தை நிர்வாக தலைநகராகவும், கர்னூலை உயர்நீதிமன்ற தலைநகராகவும் ஏற்படுத்தி மாநிலத்திலுள்ள 13 மாவட்டங்களும் சம வளர்ச்சியடைய செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யலாம் என்று முதல்வர் ஜெகன்மோகன் கூறி இருந்தார். இதனால் அமராவதியில் தலைநகருக்காக நிலம் வழங்கிய அப்பகுதி மக்கள், விவசாயிகள் அரசின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து 34வது நாளாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். bஅவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளான தெலுங்கு தேசம், பாஜ, ஜனசேனா, கம்யூனிஸ்ட் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ஆந்திராவுக்கு ஒரு தலைநகரா அல்லது மூன்று தலைநகரங்களா என்பது பற்றிய பிரச்னை மாநிலத்தில் இப்போது அனைவராலும் பேசப்படும் விஷயமாக மாறிவிட்டது.

இந்நிலையில், அமராவதியை ஒரே தலைநகரத்தை வலியுறுத்தி தலைநகரம் அமைப்பதற்காக நிலம் வழங்கிய குடும்பங்களை சேர்ந்த பெண்கள் தங்கள் ஊர்களிலிருந்து இருமுடி கட்டி பாத யாத்திரையாக விஜயவாடாவுக்கு சென்று கனகதுர்க்கை அம்மனை வழிபட்டனர். பெண்களின் இந்த போராட்ட வழிபாடு காரணமாக ஒரே தலைநகரத்தை வலியுறுத்தி நடைபெறும் போராட்டம் புதிய பரிணாமத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் ஆந்திராவின் தலைநகராக அமராவதி தொடருமா அல்லது 3 தலைநகர் அறிவிப்பு செயல்படுத்தப்படுமா என்பது குறித்து நாளை(இன்று) நடைபெறும் அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அரசு தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளது.

Tags : Kanaka Durga Amman Temple ,Andhra Pradesh ,capital ,
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி