×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப மை விற்பனைக்கு வந்தது 10 செலுத்தி பக்தர்கள் பெற்றுக்கொள்ளலாம்

திருவண்ணாமலை, ஜன.20: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப மை நேற்று முதல் விற்பனைக்கு வந்தது. இதனை பக்தர்கள் ₹10 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 10ம் தேதி நடந்தது. அன்று அதிகாலை 4 மணியளவில் கோயிலினுள் பரணி தீபமும், அன்று மாலை 6 மணியளவில் கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயரமலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. இதனை காண இந்தியா முழுவதும் இருந்து 25 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்தனர். இந்த தீபமானது தொடர்ந்து 11 நாட்கள் மலையில் பிரகாசித்தது. அதைத்தொடர்ந்து மலையில் இருந்து தீப கொப்பரை கீழே இறக்கப்பட்டு, கோயிலில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.

இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் கடந்த 10ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடந்தது. அப்போது, கார்த்திகை தீப மை சுவாமிக்கு வைக்கப்பட்டது. பின்னர், தீப மை பிரசாதம் பக்தர்களுக்கு வழங்குவதற்காக, பாக்கெட்டுகளில் அடைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று முதல் தீப மை பிரசாதம் கோயிலில் விற்பனைக்கு வந்தது. ₹10 செலுத்தி இதனை பக்தர்கள் பெற்றுக்கொள்ளலாம். மேலும், மகா தீபத்தின்போது நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள், அதற்கான ரசீதை கோயில் அலுவலகத்தில் காண்பித்து பெற்றுக் கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Karthika Deepa Ink ,devotees ,Thiruvannamalai Annamalaiyar Temple ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...