×

வாலிபர்கள் துரத்தியதால் விபரீதம் கிணற்றில் விழுந்து பள்ளி மாணவன் பலி

ஏற்காடு, ஜன.20: ஏற்காட்டில் வாலிபர்கள் துரத்தியதில் கிணற்றில் விழுந்து பள்ளி மாணவர் பலியானார். இச்சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஏற்காடு ஜெரினாக்காடு கிராமத்தை சேர்ந்த ரவி மகன் அருண்குமார்(17). அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். பொங்கல் விடுமுறை என்பதால் இவர் போட்டுக்காடு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகே, சேவியர் என்பவரது பங்களா மற்றும் சிறு பெட்டிக்கடையில் உதவியாளராக பணி செய்து வந்தார். கடந்த 17ம்தேதி இரவு, அந்த பங்களாவில் அருண்குமார், அவரது தம்பி முருகன், நண்பர்கள் திலீப், பிரசாந்த் ஆகியோர் இருந்துள்ளனர். கடைக்கு வெளியே விறகில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். அப்போது போட்டுக்காடு கிராமத்தை சேர்ந்த ஜீவா என்பவர், சரக்கு ஆட்டோவில் டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளார். அப்போது, ஆட்டோவில் வந்த ஜீவாவிற்கும், அங்கு நின்று கொண்டிருந்த அருண் மற்றும் அவரது நண்பர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது அங்கு வந்த போலீசார், இருதரப்பினரையும் சமாதானம் செய்து ஜீவாவை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பின்னர் வீட்டிற்கு சென்ற ஜீவா, தனது கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுடன் அருண்குமார் கடைக்கு வந்து மீண்டும் தகராறில் ஈடுபட்டு, கடையில் இருந்த பொருட்களை உடைத்தனர். அப்போது அருண்குமாரின் நண்பர்களும், தம்பியும் பங்களாவிற்குள் புகுந்து கதவை பூட்டிக்கொண்டனர். அருண்குமார் மட்டும் பங்களா வெளியில் வந்து, ஏற்காடு சாலையில் ஓடியுள்ளார். அவரை போட்டுக்காடு கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் துரத்தி சென்றதாக அருண்குமார் நண்பர்கள் மற்றும் அவரது தம்பி தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில், கடைக்கு அருகில் உள்ள கிணற்றில் அருண்குமார் சடலமாக கிடந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார், அருண்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து உறவினரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், நேற்று மதியம் இச்சம்பவத்தில் அருண்குமாரிடம் தகராறில் ஈடுபட்ட போட்டுகாடு கிராமத்தை சேர்ந்த அல்லிமுத்து மகன்கள் ஜீவா, ஆட்டோ டிரைவர் பாலாஜி(26), தனியார் மருத்துவமனை ஊழியர் தினேஷ்குமார், எலக்ட்ரீசியன் ரவிசந்திரன் மகன் கமலகண்ணன், மாதேஷ் மகன் வைனேஷ் ஆகியோரை இன்ஸ்பெக்டர் குலசேகரன், தலைமையில் எஸ்ஐ ரகு, எஸ்எஸ்ஐ செந்தில் ஆகியோர் கைது செய்தனர். இதில் ஜீவா மற்றும் வைனேஷ் மாணவர்கள் என்பதால், இளஞ்சிறார் நீதி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், மற்ற 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளதாகவும் இன்ஸ்பெக்டர் குலசேகரன் தெரிவித்தார்.

Tags : School boy ,
× RELATED சென்னை – கும்மிடிப்பூண்டி புறநகர்...