×

ஏற்காடு மான் பூங்காவில் செயற்கை ரோஜா தோட்டம்

சேலம், ஜன.20:  சேலம் மாவட்டம் ஏற்காடு, ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுகிறது. தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக ஏற்காட்டிற்கு வாரவிடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வனத்துறைக்கு சொந்தமான மான் பூங்கா உள்ளது. சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழும் ஏற்காடு ஏரியை  ஒட்டி அமைந்துள்ள மான் பூங்காவில், ₹10 லட்சம் பல்வேறு வகையான மின் விளக்குகளை கொண்டும், கண்ணைக் கவரும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. மின் அலங்கார விளக்குகளால்  மான் பூங்கா இரவில் ஒளிருவதால் சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் பெரியசாமி கூறியதாவது:

ஏற்காட்டில் உள்ள மான் பூங்காவில், ரோஜா செடிகளை போன்று 2000 சீன மின்விளக்குகள் இயற்கையான பூச்செடி போல நிறுவப்படுகிறது. இரவில் பல வண்ணங்களில் ஒளிரும் போது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். குறிப்பாக வானத்து நட்சத்திரங்களைப் போல பூங்காவின் ரோஜா விளக்குகளும் பிரகாசிப்பதால் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. வண்ணத்துப்பூச்சி வடிவிலான மின் விளக்குகள் பூங்காவில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளது. மின் விளக்குகள் பொருத்தப்பட்டு பூங்காவில் உள்ள மரங்களை இரவு நேரத்தில் பல வண்ணத்தில் ஒளிரச் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூங்காவில் வண்ண வண்ண பூந்தொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் இதை கண்டு ரசித்து மகிழ்வதற்காக, பூங்கா திறந்திருக்கும் நேரம் மாலை 7 மணி நேரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Rose Garden ,Yercaud Deer Park ,
× RELATED ஊட்டியில் மலர் நாற்று உற்பத்தி தீவிரம்