×

கிருஷ்ணகிரி அருகே மழை வேண்டி ஊரை காலி செய்த மக்கள்

கிருஷ்ணகிரி, ஜன.20: கிருஷ்ணகிரி அருகே மழை வேண்டி ஊரை காலி செய்துவிட்டு சென்ற மக்கள், வன துர்க்கை கங்கம்மாவிற்கு கிடா வெட்டி படையலிட்டு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறுக்கி ஊராட்சி மலையோரத்தில், கொல்லப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தையொட்டி மலைக்குகையில் உள்ள வனதுர்க்கை கங்கம்மாவை, அப்பகுதி மக்கள் முன்பு வழிபட்டு வந்தனர்.
வனதுர்க்கை சிலைக்கு அருகில் உள்ள நீரூற்றில் இருந்து தண்ணீர் வற்றாமல் வந்து கொண்டிருந்தது. இதனால், இந்த கிராமத்தை சுற்றியுள்ள ஏரிகளில் தண்ணீர் நிரம்பி, குடிநீர் பற்றாக்குறை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது அங்குள்ள ஏரி, குளங்கள் தண்ணீரின்றி வறண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மழை பெய்ய வேண்டி வனதுர்க்கை கங்கம்மாவிற்கு பொங்கலிட்டுஆடு பலியிட கிராம மக்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து, நேற்று காலை கிராமத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் ஊரை காலி செய்துவிட்டு, கூழை சுமந்து கொண்டு, ஆட்டை பலியிட மேள தாளத்துடன் கங்கம்மா கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு வனதுர்க்கை கங்கம்மாவிற்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை செய்தனர். தொடர்ந்து, பெண்கள் பொங்கல் வைத்து, ஆட்டை பலியிட்டு தங்கள் வேண்டுதல் நிறைவேற்றினர். இதையடுத்து, அனைவருக்கும் ஆட்டுக்கறியுடன் விருந்தளிக்கப்பட்டது. இதனால் மக்கள் யாருமின்றி கிராமம் வெறிச்சோடி காணப்பட்டது. இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘அம்மனுக்கு பொங்கல் வைத்து, ஆட்டை பலியிட்டு படையல் வைத்துள்ளோம். இதனால் மழை பெய்து, ஏரி, குளங்கள் நிரம்பும் என நம்புகிறோம். இனி ஒவ்வொரு ஆண்டும் அம்மனுக்கு திருவிழா நடத்த முடிவெடுத்துள்ளோம்,’ என்றனர்.

Tags : Krishnagiri ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்