×

திருவாரூர் மாவட்டத்தில் 1.20 லட்சம் குழந்தைகளுக்கு நேற்று போலியோ சொட்டு மருந்து

மன்னார்குடி, ஜன.20: திருவாரூர் மாவட்டத்தில் 1.20 லட்சம் குழந்தைகளுக்கு நேற்று நடைபெற்ற முகாம்களில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தீவிர போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் துவக்க விழா மன்னார்குடி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் ஆனந்த் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்பாள் முன்னிலை வகித்தார். இதில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் பங்கேற்று குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்தை கொடுத்து முகாமை துவக்கி வைத்தார். தொடர்ந்து அமைச்சர் காமராஜ் அளித்த பேட்டி:, போலியோ இல்லாத தமிழக த்தை உருவாக்கும் முயற்சியில் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடு பட்டுள்ளது.அரசின் தீவிர நடவடிக்கையால் 16 ஆண்டுகளாக தமிழகத்தில் போலியோ நோய் கட்டுப்பாட்டில் உள்ளது. 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப் படுகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் நேற்று ஊரக பகுதிகளில் 801 முகாம்களும், நகர் பகுதிகளில் 72 முகாம்களும் என மொத்தம் 873 முகாம்கள் அமைக்கபபட்டு 1 லட்சத்து 20 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது. போக்குவரத்து வசதி இல்லாத இடங்களிலும் நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்துகள் வழங்கப்பட்டன. பணி நிமித்தம் காரணமாக இடம் பெயர்ந்து செல்லும் மக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி அவரவர்கள் பணியிடத்தில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்துகள் வழங்கப்பட்டன. இப்பணிகளில் மாவட்டம் முழுவதும் 3500 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார். நிகழ்ச்சியில் நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்ஜி குமார், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை கண் காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், நகராட்சி ஆணையர் (பொ) மாமலை வாசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags : children ,Tiruvarur district ,
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்