×

விவசாயிகள், மீனவர் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டம் ஹைட்ரோகார்பன் 5வது ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்

தஞ்சை, ஜன.20: ஹைட்ரோகார்பன் 5வது ஏலத்தை ரத்து செய்ய வேண்டுமென பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் தலைவர் லெனின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஓ.என்.ஜி.சி.க்கும், வேதாந்தா நிறுவனத்திற்கும் முதல் சுற்று ஏலம் 5074 சதுர கி.மீ அளவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கும் நிலையில், இரண்டாம் சுற்று ஏலம், மூன்றாம் சுற்று, நான்காம் சுற்று ஏல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை 474 சதுர கி.மீ பரப்பில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஆயில் இந்தியா கார்பரேஷனுக்கு அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது. 1863 சதுர கி.மீட்டர் நிலத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஓஎன்.ஜி.சி.க்கு ஏல அனுமதி வழங்கியுள்ளது. காவிரிப் படுகை முழுவதும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஐந்தாவது முறையாக ஏல அறிவிப்பினை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் இயக்குநரகத்தின் மூலமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஆணை மூலம் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் விவசாய நிலப்பரப்பு மற்றும் கடல் பகுதிகளில் சுமார் 19,789 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்க தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரியுள்ளது. இதில் தமிழகத்தில் கடல் எல்லைப் பரப்பளவு சுமார் 4,064 சதுர கி.மீ என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்கள் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அனுமதி வழங்கியுள்ள நிலையில், தற்போது கூடுதலாக அளிக்கப்பட உள்ள அனுமதியின் மூலமாக ஒட்டுமொத்த விவசாய நிலப்பரப்பு அழிவதோடு கடல் வளங்களும் பறிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் மொத்தம் உள்ள 94 மண்டல பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்கத் திட்டம் வடிவமைக்கப்பட்டதில் தமிழகத்தில் மட்டும் 51 மண்டல பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது தமிழகத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரங்களை திட்டமிட்டு அழிக்கும் செயலாகும். மண் வளம், நீர்வளம், விவசாய உற்பத்தி, விவசாயிகளின் வருவாய், மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து வரும் வேதாந்தா,ஓஎன்ஜிசி போன்ற கார்ப்பரேட் கயவர்களிடம் நெல் விளையும் காவிரி டெல்டா பகுதிகளை தாரை வார்க்கும் செயலை கண்டித்து கடலூர்,அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம்,புதுக்கோட்டை, இராமநாதபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில் தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான அறிவிப்பாணை நடவடிக்கையை கண்டிக்கிறோம்.

ஏற்கனவே டெல்டா பகுதி மக்களின் சார்பாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மேலும் போராட்டச் சூழலை ஏற்படுத்தாமல், விவசாயம் மற்றும் கடல் வளங்களை அழிக்கும் விதத்தில் நடைமுறைப்படுத்த உள்ள ஹைட்ரோகார்பன் திட்ட ஏல அறிவிப்பினை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். நாகாலாந்து, புதுச்சேரி அரசுகள் போல் தமிழக அரசும் உடனடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிடச் செய்ய வேண்டும். அத்துடன் வருகின்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க தீர்மானம் கொண்டு வர வேண்டும்.அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Tags : cancellation ,fisherman ,
× RELATED திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள்...