×

பொங்கல் விடுமுறைக்கு வந்து திரும்பியதால் மதுரை ரயில், பஸ் நிலையங்களில் அலை மோதிய பயணிகள் கூட்டம்

மதுரை, ஜன.20: பொங்கல் பண்டிகை மற்றும் சனி, ஞாயிறு என 5 நாட்கள் விடுமுறையில் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களில் உள்ள சொந்த ஊருக்கு வந்தவர்கள் மீண்டும் சென்னைக்குச் சென்றனர். மதுரை ரயில் நிலையம், பஸ் நிலையங்களில் திரண்டதால் அங்கு பயணிகள் கூட்டம் அலைமோதியது. தமிழர் திருநாளாகிய பொங்கல் திருவிழா கடந்த 15ம் தேதி கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகை, மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் அடுத்தடுத்து வந்ததால் ஜன.15, 16 மற்றும் 17ம் ஆகிய 3 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்தது. மேலும் ஜன.18 மற்றும் ஜன.19 என சனி, ஞாயிறு இருநாட்களும் அரசு விடுமுறை நாட்களாகும். எனவே இந்த 5 நாட்கள் விடுமுறையை கொண்டாட சென்னையில் வசிக்கும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர், தங்களது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு செல்ல மதுரை வந்தனர். இங்கிருந்து பஸ்களில் தங்களது சொந்த ஊருக்குச் சென்றனர். இப்படி பொங்கல் பண்டிகையை கொண்டாட தென்மாவட்ட பகுதிகளுக்கு வந்தவர்கள் நேற்று முன்தினமும், நேற்றும் சென்னைக்கு திரும்பினர். இதனால் மதுரை ரயில் நிலையத்தில் மட்டுமல்லாமல் மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையம் பஸ் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் கடந்த இருதினங்களாக அலை மோதியது.

மதுரை ரயில் நிலையத்தில் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக, பகல் 12 மணிக்கு மதுரை ரயில் நிலையத்திலிருந்து சென்னை புறப்படும் குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ், மாலை 6.35 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும் கொல்லம் - சென்னை எக்ஸ்பிரஸ், இரவு 7.30 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும் மைசூர் எக்ஸ்பிரஸ், இரவு 8.05க்கு மதுரையிலிருந்து புறப்படும் நாகர்கோவிலிலிருந்து சென்னை செல்லும் அந்தியோதையா எக்ஸ்பிரஸ் மற்றும் இரவு 8.45 மணிக்கு மதுரையிலிருந்து சென்னைக்கு புறப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் இதனைத்தொடர்ந்து நள்ளிரவு வரை சென்னை செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக முன்பதிவில்லாத ரயில்களில் இடம்பிடிப்பதற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரும் சிரமத்திற்குள்ளானார்கள். பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ரயில் நிலையத்திலிருக்கும் கூட்டத்தை போலவே பஸ் நிலையங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூர் மற்றும் ஓசூர் செல்லும் பஸ்களுக்கும், ஆரப்பாளையம் பஸ் நிலையத்திலிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லும் பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக இரவு நேரத்தில் கூட்டம் அதிகரித்தது. ஆரப்பாளையத்தில் சில பஸ்கள் பஸ் நிலையத்திற்குள்ளேயே வரமுடியாத நிலை ஏற்பட்டது. வெளியே நிறுத்தி, பயணிகளை ஏற்றிய பின்னரே பஸ் நிலையத்திற்குள் நுழைந்து பின்னர் புறப்பட்டுச் சென்றது. நேற்று மாலை முதல் பஸ் நிலையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags : commuters ,Madurai ,bus stops ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...