×

பழநி கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு அமைச்சர்கள் பரிந்துரை கடிதத்தை கலர் ஜெராக்ஸ் எடுப்பதால் திணறல்

பழநி, ஜன.20:  பழநி கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு அமைச்சர்கள் வழங்கும் பரிந்துரை கடிதத்தை கலர் ஜெராக்ஸ் எடுத்து பலர் கொண்டு வருவதால் கோயில் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருவிழா காலஙகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தால் சிறப்பு அனுமதி கடிதம் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஏராளமானோர் கோயில் நிர்வாகம் வழங்கிய சிறப்பு அனுமதி கடிதத்தை முறைகேடாக பயன்படுத்த துவங்கினர். நாள்தோறும் சிறப்பு அனுமதி கடிதத்தில் செல்வோரின் எண்ணிக்கையே பல ஆயிரத்தை தாண்டியது.
கடந்த 1ம் தேதி புத்தாண்டு தினத்தன்று சிறப்பு அனுமதி கடிதம் பெற்றவர்கள் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் வழியில் சென்றனர். இதனால் அங்கு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து கோயில் நிர்வாகம் சிறப்பு தரிசன முறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஜஏஎஸ் அதிகாரிகள், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உட்பட குறிப்பிட்ட சிலரின் பரிந்துரை கடிதத்திற்கு மட்டுமே சிறப்பு அனுமதி சீட்டு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் விஜபி தரிசனத்தில் செல்பவர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வந்துள்ளது.

இந்நிலையில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்களது பரிந்துரை கடிதத்தில் பெயர் குறிப்பிடாமல் கையெழுத்து மட்டும் போட்டு தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்கி விடுகின்றனர். அவர்கள் அதனை கலர் ஜெராக்ஸ் போட்டு ஏராளமானோருக்கு வழங்கி விடுகின்றனர். இதனால் மீண்டும் பரிந்துரை கடிதம் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கோயில் அதிகாரிகள் திணறிப்போய் உள்ளனர். தற்போது பக்தர்கள் கொண்டு வரும் பரிந்துரை கடிதங்கள் உண்மையானதா அல்லது நகலா என ஆராயும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இனிவரும் காலங்களில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்களது பரிந்துரை கடிதங்களை பூர்த்தி செய்து மட்டுமே விநியோகிக்க வேண்டுமென கோயில் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Xerox ,ministers ,darshan ,Palani Temple ,
× RELATED தர்ஷன், அஞ்சு குரியன் நடித்த எண்ட ஓமனே