×

காதல் விவகாரத்தில் மோதல்: குமரி மருத்துவக்கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து 3 வாலிபர்கள் மீது வழக்கு

நாகர்கோவில், ஜன.20: குமரி மருத்துவக்கல்லூரி லேப் டெக்னீசியன் மாணவரை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள பழவூர் பகுதியை சேர்ந்தவர் சொர்ணமணி. இவரது மகன் ராஜா. இவர், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில், லேப் டெக்னீசியன் முதலாண்டு படித்து வருகிறார். இவருடன் படிக்கும், திங்கள்சந்தை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவருடன் ராஜா அடிக்கடி பேசுவது உண்டு. ஒரே வகுப்பில் படித்து வந்ததால் இருவரும் நண்பர்களாக பழகினர். இந்த நிலையில் மாணவியின் உறவினரான மயிலாடி பகுதியை சேர்ந்த காட்வின் என்பவர், மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் மாணவியை சந்திக்க வரும் போது, ராஜா அடிக்கடி மாணவியுடன் பேசிக் கொண்டு இருக்கும் தகவல் கிடைத்தது. இதனால் காட்வினுக்கும், ராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நான் காதலிக்கும் பெண்ணிடம் நீ பேசக்கூடாது என காட்வின், ராஜாவை எச்சரித்துள்ளார். ஆனால் ராஜா, நான் நட்பாக தான் பழகுகிறேன். என்னுடன் படிக்கும் மாணவியுடன் பேசாமல் இருக்க மாட்டேன் என கூறி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த காட்வின் நேற்று முன் தினம் மாலை ராஜாவை, உன்னிடம் தனியாக பேச வேண்டும் என கூறி பைக்கில் அழைத்துள்ளார். அங்கிருந்து வடசேரி புதுக்குடியிருப்பு பகுதிக்கு அழைத்து வந்து தகராறு செய்துள்ளார். இந்த தகராறில் காட்வின் மற்றும் அவரது நண்பர்கள் அஜய், மைக்கேல் ஆகியோர் சேர்ந்து ராஜாவை கத்தியால் குத்தி விட்டு தப்பினர். படுகாயம் அடைந்த ராஜா, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வடசேரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வடசேரி போலீசார் விசாரணை நடத்தி காட்வின் உள்பட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


சுங்கான்கடையில் வடமாநில தொழிலாளர்களிடம் செல்போன் பறித்த கும்பல்

திங்கள்சந்தை, ஜன.20: அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அஜய் திரிவேரி, பீப் திவேரி, அஜீத் புயோரி. இவர்கள் 3 பேரும் பார்வதிபுரத்தை அடுத்த சுங்கான்கடையில் உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து வருகின்றனர். சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் சுங்கான்கடை, பனவிளை பகுதியில் செல்போன் ரீசார்ஜ் செய்துவிட்டு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் இவர்களை வழிமறித்து, மூவரது செல்போன்களையும் பறித்து சென்றனர். பின்னர் இதுகுறித்து தொழிலாளர்கள் இரணியல் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பிரான்சிஸ், சுஜின், சிபு என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்

Tags : Clash ,teenagers ,college student ,Kumari ,
× RELATED கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில்...