செண்பகராமன்புதூரில் துணிகரம் வெங்காய வியாபாரி வீட்டை சூறையாடிய மர்ம கும்பல் பைக் எரிப்பு

ஆரல்வாய்மொழி, ஜன.20: செண்பகராமன்புதூரில் வெங்காய வியாபாரி வீட்டில் ஜன்னல்களை உடைத்து சூறையாடி பைக்கை எரித்த மர்மகும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர்-நெடுமங்காடு தேசிய ெநடுஞ்சாலையில் செண்பகராமன்புதூர் மின்வாரிய அலுவலகம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மகன் கணேசன். இவரது மனைவி ராஜேஷ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணேசன் வெங்காயம், பூண்டு மொத்த வியாபாரியாக உள்ளார். இவர் தினமும் பணி முடிந்து இரவு 9 மணியளவில் வீட்டுக்கு வருவார். இந்நிலையில் நேற்று அதிகாலை 2.20 மணியளவில் வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்போது வீட்டிற்கு வெளியே பயங்கர சத்தம் கேட்டது. அதிர்ச்சியில் ராஜேஷ்வரி எழுந்தார். சிறிது நேரத்திற்கு பின் மீண்டும் பயங்கர சத்தம் கேட்டது. உடனடியாக அவர் கணேசனை எழுப்பினார். அப்போது வீட்டிற்கு வெளியே ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்டது.

அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டிற்குள் அமைதியாக இருந்தனர். அப்போது வீட்டின் முன் நிறுத்தி இருந்த பைக் தீ பற்றி எரிந்தது. இதையடுத்து கணேசன் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். உடனடியாக சிலர் விரைந்து வந்தனர். அதன்பின் கணேசன் வெளியே வந்து எரிந்து கொண்டிருந்த பைக்கில் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். ஆனால் அங்கு வேறு யாரும் இல்லை. ஆனால் வீட்டின் மீட்டர் பெட்டியின் பியூஸ் பிடுங்கப்பட்டு வெளியே வைக்கப்பட்டிருந்தது. குழந்தைகள் விளையாடுவதற்காக கட்டப்பட்டிருந்த ஊஞ்சல் அறுக்கப்பட்டிருந்தது. அதை பைக் மீது போட்டு தீ வைத்துள்ளனர். மேலும் வீட்டில் வளர்க்கும் நாய் வாயில் நுரைதள்ளியபடி மயங்கி கிடந்தது.

இது குறித்து அவர்கள் செண்பகராமன்புதூர் ஊராட்சி தலைவர் கல்யாணசுந்தரத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து பார்த்தபோது, கணேசன் வீட்டை சுற்றி முள்வேலி அமைத்திருந்தார். வீட்டின் பின்புறம் உள்ள முள்வேலி ஒரு ஆள் நுழையும் அளவுக்கு வெட்டி அகற்றப்பட்டிருந்தது. இதனால் அவரது எதிரிகள் யாராவது அவரை பழிவாங்குவதற்காக இதுபோன்ற நாச வேலையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவு வெங்காய மொத்த வியாபாரி வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டை சூறையாடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலீஸ் ரோந்து தேவை

செண்பகராமன்புதூர் பகுதியில் இரவு வேளையில் தற்போது போலீஸ் ரோந்து பணி மிக குறைவாகவே நடக்கிறது. இந்த பகுதிகளில் இரவு நேரத்தில் இளைஞர்கள் சாலையோரம் நின்று மது அருந்துவது, சீட்டு விளையாடுவது, போதையில் ரகளையில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. குறிப்பாக நள்ளிரவு 11 மணி முதல் 3 மணிக்குள் இதுபோன்ற குற்றச்செயல்கள் அதிகளவில் நடக்கின்றன. ஆனால் போலீசார் இரவு ரோந்து செல்வதில்லை. போலீசாரின் மெத்தனமே இதுபோன்ற குற்றச்செயல்கள் அதிகரிக்க காரணமாக இருக்கிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே இரவு நேரத்தில் போலீசார் ரோந்து சென்று சமூக விரோதிகள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories:

>