×

குமரி எஸ்.ஐ. கொலையில் கைதான 2 தீவிரவாதிகள் இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர் அசம்பாவிதங்களை தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

நாகர்கோவில், ஜன.20: குமரி சிறப்பு எஸ்.ஐ. கொலையில் கைதான 2 தீவிரவாதிகள், இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இவர்கள் போலீஸ் காவலில் ஒப்படைக்கப்படலாம் என தெரிகிறது குமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் கடந்த 8ம் தேதி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம், நாகர்கோவில், கோட்டார் இளங்கடையை சேர்ந்த தவுபிக் ஆகியோரை கர்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த 14ம் தேதி கைது செய்தனர். குமரி மாவட்டம் கொண்டு வரப்பட்டு, குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது உபா சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் கூட்டாளிகள் பெங்களூர், டெல்லியில் கைது செய்யப்பட்ட வண்ணம் உள்ளனர். இதற்கிடையே கைதாகி பாளையங்கோட்டை சிறையில் உள்ள அப்துல் சமீம் மற்றும் தவுபீக் ஆகியோர் இன்று (20ம்தேதி) குழித்துறை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இவர்களை 15 நாள் போலீஸ் காவலில் எடுக்க, நீதிமன்றத்தில் காவல் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இன்று இவர்கள் போலீஸ் காவலில் ஒப்படைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

கடந்த 16ம் தேதி இவர்கள் நீதிமன்றத்துக்கு வந்த போது, இவர்கள் வந்த வேனை வழி மறித்து சிலர் தாக்க முயன்றனர். இவர்களுக்கு உதவ வந்த வக்கீல்களின் கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. இந்த சம்பவங்களை  தொடர்ந்த இன்று அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் இருக்கும் வகையில் குழித்துறை நீதிமன்ற வளாகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட உள்ளனர். தீவிரவாதிகளை அழைத்து வரும் நேரத்தை போலீசார் ரகசியமாக வைத்துள்ளனர். பாதுகாப்பு கருதி எந்த நேரத்திலும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இன்று போலீஸ் காவல் கிடைத்ததும், துப்பாக்கியை கண்டுபிடிக்கும் வகையில் இவர்கள் கேரளாவுக்கும் அழைத்து செல்லப்படலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விசாரணைக்கு பின்னரே இவர்களுடன் தொடர்பில் இருந்தது யார்? வில்சன் கொலையில் வேறு யார், யாருக்கு தொடர்பு என்பது பற்றிய முழு விவரம் தெரிய வரும் என போலீசார் கூறி உள்ளனர்.

மேலும் ஒரு கூட்டாளி கைது

கடந்த 17ம் தேதி, தீவிரவாத அமைப்பின் தலைவனான மெகபூப் பாஷா (45) என்பவரை பெங்களூருவில் போலீசார் கைது செய்தனர். இவரது கூட்டாளிகள் முகமது மன்சூர், ஜபீபுல்லா, அஜ்மத்துல்லா ஆகியோரும் உடன் கைது செய்யப்பட்டனர். எஸ்.ஐ. கொலைக்கான சதி திட்டம் மெகபூப் பாஷா தலைமையில் தான் தீட்டப்பட்டதாகவும், இந்த சம்பவத்தின் மூளையாக அவர் செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. எனவே இந்த கொலை வழக்கு தொடர்பாக மெகபூப் பாஷாவையும் விசாரிக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே இவர்களுடன் தொடர்புடைய உசேன் ஷெரீப் என்பவரையும் பெங்களூரில் தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர், எஸ்.ஐ. கொலையில் தொடர்பு உடைய தவுபீக், அப்துல் சமீம் ஆகியோர் பெங்களூரில் பதுங்கி இருக்க அடைக்கலம் கொடுத்தவர் என்று கூறப்படுகிறது. இவரை சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

Tags : militants ,Kumari S.I. ,murder ,
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி